சுக்மா: வாள்வீச்சு, நீச்சல் போட்டிகளில் தங்கம் வெல்ல சிலாங்கூர் இலக்கு

19 மே 2026, 8:13 AM
சுக்மா: வாள்வீச்சு, நீச்சல் போட்டிகளில் தங்கம் வெல்ல சிலாங்கூர் இலக்கு

சுபாங் ஜெயா, மே 19 – இந்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறவுள்ள 2026 மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் (சுக்மா), சிலாங்கூர் மாநிலக் குழு வாள்வீச்சு (Fencing) மற்றும் நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளதாக அதன் தலைவர் அப்பாஸ் சலிம்மி அத்மி தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களின் தற்போதைய சிறப்பான செயல்திறன் மற்றும் இப்போட்டிகளுக்காக அவர்கள் காட்டி வரும் தீவிர அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எதிர்பார்ப்பு அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2024 சரவாக் சுக்மா போட்டியில் வாள்வீச்சு பிரிவில் சிலாங்கூர் ஒரு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றிய வேளையில், இம்முறை சொந்த மண்ணில் நடத்தும் விளையாட்டுகளில் இன்னும் கூடுதல் பதக்கங்களை வெல்வதே இலக்கு என்று அவர் விவரித்தார்.

நேற்று இரவு இங்குள்ள எலைட் வாள்வீச்சு அகாடமியில் மாநில விளையாட்டு வீரர்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாஸ் சலிம்மி, விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினரிடமிருந்து மிக வலுவான அர்ப்பணிப்பைக் காண முடிவதாகவும், இதனால் சிலாங்கூர் குழுவிற்கு வாள்வீச்சுப் பிரிவு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.

அதே வேளையில், தேசிய அளவிலான சிறந்த நீச்சல் வீரர்களை உருவாக்குவதில் சிலாங்கூர் மாநிலம் எப்போதும் பெயர் பெற்றது என்பதால், நீச்சல் போட்டியும் சிலாங்கூருக்கு அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தரும் முக்கியப் பிரிவுகளில் ஒன்றாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது சுக்மா பயிற்சித் திட்டத்தில் சுமார் 1,800 நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ள போதிலும், அவர்களிலிருந்து இறுதிப் பட்டியலைத் தேர்ந்தெடுப்பது சவாலானது என்றும், இதற்காகக் கடுமையான மதிப்பீடுகள் தேவைப்படுவதால் 70 வீரர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

மேலும் சிலம்பம், முவாங் தாய், வூஷூ மற்றும் ரக்பி உள்ளிட்ட பல விளையாட்டுப் பிரிவுகளும் தங்கப் பதக்கங்களை வெல்லக்கூடிய சாத்தியமான துறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாஸ் சலிம்மி தெரிவித்தார்.

இதே வேளையில், 2026 சிலாங்கூர் சுக்மா போட்டியில் தங்கம் வெல்லும் வாள்வீச்சு வீரர்களுக்கு 1,000 ரிங்கிட் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

சிலாங்கூர் வாள்வீச்சு குழுவினர் தமது ஸ்ரீ செர்டாங் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பயிற்சி பெற்று வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும், விளையாட்டு வீரர்களின் உத்வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 22-ஆவது சுக்மா போட்டிகள், சிலாங்கூரின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 52 அரங்குகளில், 37 விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் 469 நிகழ்வுகளாக நடத்தப்படவுள்ளன.

எனினும், ட்ராக் சைக்கிள் ஓட்டுதல் போட்டி மட்டும் நெகிரி செம்பிலான், நிலாயில் உள்ள தேசிய வெலோட்ரோமில் நடைபெறும். அதே வேளையில், செப்டம்பர் 5 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பாரா சுக்மா போட்டிகள் பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் 10 விளையாட்டுப் பிரிவுகளுடன் 316 நிகழ்வுகளாக நடத்தப்படும்.

இம்முறை 2026 சுக்மா போட்டிகளில் சிலாங்கூர் மாநிலம் ஒட்டுமொத்தமாக 54 தங்கப் பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.