சுங்கை செமினி ஆற்று நீரில் காணப்பட்ட நுரை, தொழிற்சாலை கழிவு நீரால் ஏற்பட்டிருக்கலாம் — LUAS

16 மே 2026, 3:08 AM
சுங்கை செமினி ஆற்று நீரில்  காணப்பட்ட  நுரை, தொழிற்சாலை கழிவு நீரால் ஏற்பட்டிருக்கலாம் — LUAS

ஷா ஆலாம், மே 15 — சிலாங்கூர்  நீர் அளிப்பு வாரியம் Lembaga Urus Air Selangor (LUAS) மேற்கொண்ட விசாரணையில், செவ்வாய்க்கிழமை செமினிஆற்றில் கண்டறியப்பட்ட நுரையுடன் கூடிய நீர், தாமான் ஸ்ரீ ஹனிகோ தொழிற்பேட்டையிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீரால் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் இந்த நுரை நீர் கண்டறியப் பட்டதைத் தொடர்ந்து, உடனடி விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சிலாங்கூர் மாநில நீர்வள மாசுபாடு அவசர கையேட்டின் கீழ் “Code Yellow” எச்சரிக்கை நிலை செயல்படுத்தப் பட்டதாக LUAS தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில், ஆற்றின் சுமார் 300 மீட்டர் நீளப்பகுதியில் நுரை நீர் காணப்பட்டதாகவும், இது சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Sungai Semenyih Water Treatment Plant (WTP) செயல்பாடுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

“மூலநீர் பாதுகாப்புத் திட்டமான SJAM செயல்படுத்தப் பட்டது. இதன் கீழ், Pond B மற்றும் Pond C-இலிருந்து நீர் பம்ப் செய்யப்பட்டு நேரடியாக Sungai Semenyih WTP-க்கு அனுப்பப்பட்டது. இது, சுத்திகரிப்பு நிலையத்திற்கான மூலநீர் விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப் பட்ட உடனடி தடுப்பு நடவடிக்கையாகும்.

“நுரை நீரின் உண்மையான மூலத்தை கண்டறியவும், Zero-Discharge Policy (ZDP) கடைப் பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும், தொழிற்பேட்டை வளாகங்களில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், LUAS குழுவினர் புதன்கிழமை காலை வரை சம்பவ இடத்தை கண்காணித்ததாகவும், அதன் பின்னர் நுரை வெளியேற்றம் அல்லது அசாதாரண நாற்றமோ காணப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

“புதன்கிழமை காலை 10.30 மணிக்கு SJAM நடவடிக்கை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் Sungai Semenyih WTP, செமினிஆற்றிலிருந்து வழக்கமான மூலநீர் விநியோகத்துடன் இயல்பான செயல்பாட்டிற்கு திரும்பியது.“தற்போதைய நிலைமை மற்றும் ஆற்றின் நீரோட்டம் அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன. WTP செயல்பாடுகளுக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை,” என்றும் அது கூறியுள்ளது.

எனினும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, அருகிலுள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர் வெளியேற்றம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் LUAS தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.