செந்தோசா தொகுதியில் பிரம்மாண்ட ‘சித்திரை கலை விழா 2026’ - 3,000 பேர் பங்கேற்க இலக்கு

4 மே 2026, 5:55 AM
செந்தோசா தொகுதியில் பிரம்மாண்ட ‘சித்திரை கலை விழா 2026’ - 3,000 பேர் பங்கேற்க இலக்கு

கிள்ளான், மே 4: செந்தோசா தொகுதி மக்கள் சேவை மையத்தின் ஏற்பாட்டில், ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் முதல் முறையாக ‘சித்திரை செந்தோசா ஒற்றுமை கலாச்சார விழா 2026’ (Pesta Kebudayaan Perpaduan Chithirai Sentosa 2026) எதிர்வரும் மே 10-ஆம் தேதி மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

இந்தத் திருவிழா குறித்துத் தகவல் வெளியிட்ட செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், குறிப்பாகப் பண்டார் செந்தோசா சுற்றுவட்டாரக் குடியிருப்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்தியச் சமூகத்தின் கலை மற்றும் கலாச்சார விழுமியங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த விழாவில், பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், மரபுசார் விளையாட்டுகள், கலாச்சாரக் கண்காட்சிகள் மற்றும் பாரம்பரிய உணவு அங்காடிகள் எனப் பல சுவாரசியமான அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன், உள்ளூர் மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி போன்ற குடும்ப நல நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

“இந்தச் சித்திரை விழா வெறும் பொழுதுபோக்கு நிகழ்வு மட்டுமல்ல; செந்தோசா தொகுதியில் வாழும் பல்லின மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியத் தளமாகும். கலை மற்றும் கலாச்சாரம் என்பது சமூகங்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் கொண்டது. அதன் மூலம் நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதே எமது நோக்கமாகும்,” என டாக்டர் குணராஜ் குறிப்பிட்டார்.

பல்வேறு அரசு சாரா அமைப்புகள் (NGO), ஆலயங்கள், பள்ளிகள் மற்றும் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியுடன் இந்த விழா முன்னெடுக்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளுடன் மட்டுமல்லாமல், ரத்த தானம் மற்றும் இலவச மருத்துவப் பரிசோதனை போன்ற சமூக நலச் சேவைகளை வழங்கப் பல அரசு முகமைகளும் இதில் கைகோர்த்துள்ளன.

விழாவின் சிறப்பம்சமாக, அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் மோட்டார் சைக்கிள், மடிக்கணினி மற்றும் கைபேசிகள் உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

பல்லின கலாச்சாரங்களைச் சுவைக்கவும், சமூக நல்லிணக்கத்தைக் கொண்டாடவும் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்த விழாவில் திரளாகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.