இந்து ஆலய விவகாரம்: தேவையற்ற பதிவுகளைத் தவிர்த்து, பிரதமரின் ஆக்ககரமான செயலுக்கு  அனைவரும்  ஒத்துழைக்க குணராஜ் ஜோர்ஜ் கோரிக்கை

13 மே 2026, 8:48 AM
இந்து ஆலய விவகாரம்: தேவையற்ற பதிவுகளைத் தவிர்த்து, பிரதமரின் ஆக்ககரமான செயலுக்கு  அனைவரும்  ஒத்துழைக்க குணராஜ் ஜோர்ஜ் கோரிக்கை
ஷா ஆலம், மே 13 - ஜனநாயக ரீதியில் கருத்துக்களை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு , ஆனால் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் எப்போதும் நியாயமானதாகவும், உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ஆக்கப்பூர்வமான ஒன்றாகவும் இருக்க வேண்டும் என்று  செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
இந்து ஆலய விவகாரம் தொடர்பாக பிரதமர் துறை முன்னாள் அமைச்சர் பி.வேதமூர்த்தி முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்குத் தனது வலுவான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.  
தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டைச் சீராக நிர்வகிக்கப் பிரதமர் பெரும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதுடன் பல இன சமய  நாடான மலேசியாவின்  மிக நெருக்கடியான இன, சமய  விவகாரங்களுக்கும்  ஆக்ககரமாக தீர்வு காண முயன்று வருகிறார் என்பதனை  மனதில் கொள்ள வேண்டும். பிரதமரின் நல்ல முயற்சிக்கு  ஒத்துழைப்பு வழங்குவதும், சுமூகமான மேம்பாட்டுக்கு, வழி அமைப்பதும் இந்தியர்களின் நல்வாழ்வுக்கு அர்பணிக்கும், நல்வாழ்வில் அக்கறையுள்ள  அனைவருக்கும்  இருக்க வேண்டிய  நற்பண்பு ஆகும்.
மலேசியா ஒரு பல்லின நாடு என்பதை நினைவூட்டிய குணராஜ், அரசாங்கத்தின் முடிவுகள் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்படுவது இயல்பானது என்றார் குணராஜ்.
"இந்தியச் சமூகம் உட்பட அனைத்து சமூகத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பிரதமர் அன்வார் தொடர்ந்து பாடுபடுகிறார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் தலைவர் இல்லை, அவர் மேற் கொண்டுவரும்  பல  அணுகுமுறைகள் அவர் சிறந்த, அனைத்து மலேசியர்களுக்குமான பிரதமர், என்பதை  நிரூபிப்பதாக  அவர் திட்டவட்டமாக கூறினார்.
முன்னதாக, ஆலய விவகாரம் தொடர்பாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தனது அறிக்கைக்குப் பிரதமர் விளக்கம் அளித்திருந்தது, வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்திய சமூகத்தின் கோபத்தைத் தணிக்கும் ஒரு கண்துடைப்பு முயற்சி மட்டுமே என வேதமூர்த்தி விமர்சித்திருந்தார். 
அந்த நீண்ட காலப்  பிரச்சனைக்குச் சுமூகமான நல்ல தீர்வை காண,  அதிகாரத்தில் உள்ள மற்றவர்கள் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும்  களங்கம் கற்பிக்காது, அதற்கு தீர்வு காண  ஒத்துழைப்பது சமுதாயத்தின் மீது  கொண்டுள்ள  அக்கறையை காட்டும் என்றார் குணராஜ். 
இப்பொழுது  அரசு பொறுப்புகளில் இருப்பவர்கள்  எடுக்கும்  முயற்சிகளின்  வழி சிறந்த தீர்வைக் காண, தற்போது கோவில் நிர்வாகக் குழுக்கள் மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் மாநில அரசுகளுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டு வருவதை  மத்திய அரசு ஊக்குவிக்கிறது.
இத்தகைய சிக்கலான விவகாரங்களுக்கு நிதானமான விவாதங்களும், சட்ட ரீதியான செயல்முறைகளும் மிக அவசியம் என்றும், இத்தருணத்தில் அரசியல் ஆதாயத்திற்காக தேவையற்றப் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம் என்றும் குணராஜ் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.