ஷா ஆலம், மே 2: கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி, செஞ்சாரோமின் ஜாலான் கிள்ளான்-பந்திங் சாலையில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த ஆயுதக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, பட்டாக்கத்தி மற்றும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஏந்திய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் அக்மல் ரிசால் ரட்சி கூறுகையில், இரவு சுமார் 10.18 மணியளவில் ஒரு பெண் சாட்சியிடமிருந்து MERS 999 அவசர அழைப்பு கிடைத்ததை அடுத்து இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினார்.
"முகமூடி அணிந்த இரண்டு ஆண் சந்தேக நபர்கள் கடைக்குள் நுழைந்து, பட்டாக்கத்தி மற்றும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் காட்டி பணமளிக்கும் கவுண்டரில் இருந்த ஊழியரை மிரட்டி உள்ளனர்," என்று அவர் கோலா லங்காட் மாவட்ட போலீஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் சுமார் RM798 ரொக்கப் பணம் மற்றும் பல சிகரெட் பெட்டிகளை எடுத்துக்கொண்டு ஒரு காரில் தப்பிச் சென்றுள்ளனர்.குற்றவியல் சட்டத்தின் 395/397 பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப் படலாம்.எனவே, இச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது 03-3187 2222 என்ற எண்ணில் கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் (IPD) செயல்பாட்டு அறையையோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.






