இனம், மதம் மற்றும் அரசவம்சம் (3R) தொடர்பான உள்ளடக்கங்களை பரப்புவது குற்றம்- RM500,000 வரை அபராதம்

3 மே 2026, 7:37 AM
இனம், மதம் மற்றும் அரசவம்சம்  (3R) தொடர்பான உள்ளடக்கங்களை பரப்புவது குற்றம்- RM500,000 வரை அபராதம்

ஷா ஆலம்: பொதுமக்களிடையே பதட்டத்தைத் தூண்டக்கூடிய இனம், மதம் மற்றும் அரசவம்சம் (3R) தொடர்பான உள்ளடக்கங்களை உருவாக்குவதையோ அல்லது பரப்புவதையோ தவிர்க்குமாறு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM) கடுமையாக எச்சரித்துள்ளது.

இணையதள சேவைகள் மற்றும் சமூக ஊடகத் தளங்களைத் தவறாக பயன்படுத்துவதை, குறிப்பாக ஆத்திரமூட்டும், அவமதிக்கும் அல்லது வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கங்கள் தொடர்பில், ஆணையம் தீவிரமாகக் கருதுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமூகத்தில் தவறான புரிதல்களையும் விரோதத்தையும் தவிர்க்க, எந்த ஒரு தகவலையும் பகிர்வதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். "சட்டத்தை மீறும் உள்ளடக்கங்களைக் கண்காணிக்கவும், விசாரிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் SKMM, ராயல் மலேசியா காவல்துறை மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து செயல்படும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233-இன் கீழ் RM500,000 வரை அபராதம், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப் படலாம் என்று அது தெளிவு படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஒத்துழைக்க தவறும் தள வழங்குநர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் படலாம்.

அவர்கள் சட்டங்களைக் கடைப்பிடித்து, தங்கள் சேவைகள் தவறாகப் பயன்படுத்தப் படுவதைத் தடுக்க வேண்டும் என SKMM வலியுறுத்தியது. முன்னதாக, அரச பாரம்பரிய உடை அணிந்த பன்றியின் படம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சமூக ஊடகக் கணக்கின் நிர்வாகியிடம் SKMM வாக்குமூலம் பதிவு செய்துள்ளதுடன், விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.சமீபத்தில், சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம் (MAIS), மாநிலத்தின் இஸ்லாமியத் தலைவரான சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் திருத்தப் பட்ட காட்சிப் பதிவுகள் பல முகநூல் கணக்குகள் மூலம் பரப்பப்பட்டதை வன்மையாகக் கண்டித்தது.

"லூகாஸ் லியாம்" மற்றும் "ஹுவான் தி ப்யூர் லேர்னிங் சென்டர்" போன்ற முகநூல் கணக்குகளுடன் தொடர்புடைய இந்தச் செயல், பொறுப்பற்றதும், சிலாங்கூரில் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே செய்யப் பட்டதாகவும் MAIS இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

இந்தக் காட்சிப் பதிவுகள், இஸ்லாமியத் தலைவர் என்ற மாட்சிமை தங்கிய சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜின் நிலையை அவமதிப்பது மட்டுமல்லாமல், அரச நிறுவனத்தை ஷரியா சட்டத்திற்கும் சமூக நெறிகளுக்கும் முரணான படங்களுடனும் கூறுகளுடனும் தொடர்புபடுத்துவதாக MAIS குறிப்பிட்டது.

"இந்தச் செயல்கள் சிலாங்கூரில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப் பட்டதாக MAIS நம்புகிறது," என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.