சிலாங்கூரில் காசநோய் பாதிப்பு சீராக உள்ளது; மாநில அரசு RM800 வரை ஊக்கத்தொகை வழங்குகிறது

28 ஏப்ரல் 2026, 3:57 AM
சிலாங்கூரில் காசநோய் பாதிப்பு சீராக உள்ளது; மாநில அரசு RM800 வரை ஊக்கத்தொகை வழங்குகிறது

ஷா ஆலம், ஏப்ரல் 28: சிலாங்கூரில் காசநோய் (டிபி) பாதிப்பு விகிதம் 100,000 மக்களுக்கு 61 முதல் 80 சம்பவங்கள் என்ற அளவில் சீராக இருப்பதாக மாநில பொது சுகாதார ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்பக் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகள் திறமையாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய, மாநில அரசும் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையும் (ஜே.கே.என்.எஸ்) இந்த நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

இவ்வாண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி வரை, சிலாங்கூரில் 1,222 காசநோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பெட்டாலிங் (321), உலு லங்காட் (302), கோம்பாக் (199), கிள்ளான் (192), மற்றும் சிப்பாங் (63) ஆகிய ஐந்து மாவட்டங்கள் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளன.

"காசநோய் ஒரு பரவலான பேச்சாக இருந்தாலும், உண்மையில் சிலாங்கூர் காசநோய் தொடர்பில் மிகவும் மோசமான நிலையில் உள்ள மாநிலம் அல்ல. நாடு தழுவிய நிலவரத்தைப் பார்க்கும்போது, 100,000 மக்களுக்கு 61 முதல் 80 வரையிலான தொற்று விகிதத்துடன் நாம் இன்னும் சீரான நிலையில் இருக்கிறோம்," என்று அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில்
கூறினார்.

மேலும், இந்த ஆண்டு மார்ச் 31 வரை, 'சிலாங்கூர் மாநில காசநோய் சிகிச்சை ஊக்கத்தொகை' திட்டத்தின் கீழ் 190 நோயாளிகள் பயனடைந்துள்ளனர் என்று ஜமாலியா தெரிவித்தார்.

"இந்த முயற்சியின் கீழ், தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று குணமடையும் காசநோய் நோயாளிகளுக்கு RM800 வரை நிதியுதவி வழங்கப்படும்."

"காசநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை பெறுவதில் உதவ, மாநில அரசு 2026 ஆம் ஆண்டில் RM1 மில்லியன் ஒதுக்கீட்டில் இந்த காசநோய் சிகிச்சை ஊக்கத்தொகை திட்டத்தை தொடரும்," என்று அவர் மேலும் கூறினார்.

இந்தத் திட்டம் மாநில அரசு மற்றும் ஜே.கே.என்.எஸ் இடையேயான ஒரு கூட்டு முயற்சியாகும் என்றும், அதிக பாதிப்புகளைக் கொண்ட பிற மாநிலங்களில் கூட சிலாங்கூரைப் போல் இத்தகைய சலுகைகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.