தொடக்க மற்றும் நிறைவு விழாக்களை இரத்து செய்து மிதமான அளவில் சுக்மா விளையாட்டை தொடர சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு

25 ஏப்ரல் 2026, 2:10 AM
தொடக்க மற்றும் நிறைவு விழாக்களை இரத்து செய்து  மிதமான அளவில்  சுக்மா விளையாட்டை தொடர  சட்டமன்ற உறுப்பினர்  ஆதரவு

ஷா ஆலம், ஏப்ரல் 24 - தொடக்க மற்றும் நிறைவு விழாக்களை இரத்து செய்வது உட்பட, செலவைக் குறைக்கும் நடவடிக்கைகளுடன் 2026 சிலாங்கூர் சுக்மா விளையாட்டுப் போட்டிகளை எளிமையான முறையில் தொடரலாம் என்று கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரைத்துள்ளார்.

இந்த அணுகுமுறை, தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, தொழில்முறை ரீதியாக இவ்விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து நடத்த வழிவகுக்கும் என்று லிம் யி வெய் கூறினார்.

“பொருளாதாரக் கண்ணோட்டத்தில், பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் சுக்மா மற்றும் பாரா சுக்மா போட்டிகள் பன்மடங்கு பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தங்கும் விடுதிகள், வீட்டுத் தங்குமிடங்கள், உணவு மற்றும் பானங்கள் துறை, சில்லறை வணிகம் மற்றும் சுற்றுலாப் பொருள் உற்பத்தியாளர்கள் என அனைவரும் நாடு முழுவதிலுமிருந்து வரும் குழுக்களின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.

“இந்த விளையாட்டுப் போட்டி, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (IKS) உள்நாட்டு நுகர்வை உருவாக்குவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

“விளையாட்டு அரங்கங்கள் அழகாக மேம்படுத்தப்
பட்டும், சுக்மா ஒத்திவைக்கப் படுவதால் மக்கள் கூட்டம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும் உணவுக்கடை வியாபாரிகளுக்காகப் பரிதாபமாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில், மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூர் ரக்பி சங்கத்தின் (KRS) தலைவருமான யி வெய், இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தை (KBS) வலியுறுத்தினார்.

“சுக்மா போட்டிகளின் 100 விழுக்காட்டு செலவையும் மாநில அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று KBS எதிர்பார்ப்பது போன்ற ஒரு தவறான கருத்து நிலவுகிறது, அதை சரிசெய்ய விரும்புகிறேன்.

“உண்மையில், இதில் சலுகைகள் உள்ளன. 2018ஆம் ஆண்டு பேராக் சுக்மா விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்காக 152 மில்லியன் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீட்டையும், 2024ஆம் ஆண்டு சரவாக் சுக்மாவுக்காக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டையும் KBS வழங்கியுள்ளது.

“எனவே, 2026 சிலாங்கூர் சுக்மாவுக்காக நிதி உதவியை வழங்க சுக்மா உயர்மட்டக் குழு ஒப்புக்கொள்வது ஒரு புதிய விஷயம் அல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தணிந்து, ஷா ஆலம் விளையாட்டரங்கின் கட்டுமானம் முழுமையாக நிறைவடையும் வரை 2026 சுக்மா போட்டிகளை ஒத்திவைக்குமாறு சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் பரிந்துரைத்திருந்தார்.

தற்போதைய பொருளாதாரச் சூழலில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான செலவு அதிகமாக இருப்பதால் இந்த ஆலோசனையைத் தாம் முன்வைத்ததாக மாட்சிமை தங்கிய சுல்தான் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், 2026 சிலாங்கூர் சுக்மா போட்டிகளை நடத்துவது குறித்த முடிவு, ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு உயர்மட்டக் குழு கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌபிக் ஜொஹாரி கூறியிருந்தார்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.