சிப்பாங், ஏப்ரல் 21 – நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை 68 வயது முதியவர் ஒருவர் இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்தார்.
குற்றம் சாட்டப் பட்டவரான (OKS) இட்ரிஸ் முகமது, நீதிபதி அகமது ஃபுவாட் ஒத்மான் முன்னிலையில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட பிறகு, தனது குற்றமற்ற தன்மையை பதிவு செய்தார்.
குற்றச்சாட்டின் படி, இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர, கடந்த ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி பிறரின் மனதைப் புண்படுத்தும் நோக்கத்துடன் "Idris Mohamad" என்ற ஃபேஸ்புக் கணக்கு மூலம் அவதூறான பதிவை உருவாக்கியுள்ளார்.
அந்த பதிவு டிசம்பர் 23, 2025 அன்று பிற்பகல் 3 மணியளவில், சைபர்ஜெயாவில் உள்ள மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (MCMC) மெனாரா 1-ல் பார்க்கப் பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு, 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233(1)(a) பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ளது.
இக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இதே சட்டத்தின் 233(2) பிரிவின் கீழ் அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.
மேலும், தண்டனைக்குப் பிறகு குற்றம் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் கூடுதலாக 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.
எம்.சி.எம்.சி தரப்பு அரசு வழக்கறிஞர் நஸ்ருல் நிஜாம் முகமட் ஜமேரி, 5,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை ஒரு நபர் ஜாமீனுடன் முன்மொழிந்தார்.
இருப்பினும், வழக்கறிஞர் பிரதிநிதிக்காத இட்ரிஸ், தனக்கு வேலை இல்லை என்றும், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியைக் கவனிக்க வேண்டும் என்றும் கூறி, குறைந்த ஜாமீன் தொகையைக் கோரினார்.
இதையடுத்து, ஒரு நபர் ஜாமீனில் 3,000 ரிங்கிட் செலுத்த நீதிமன்றம் அனுமதித்தது. மேலும், வழக்கின் மறு செவிமடுப்புக்காக மே 22-ஆம் தேதியை நிர்ணயித்தது.





