மிரி, செப். 22 - ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய முதியவர் ஒருவர் நேற்றிரவு பத்து நியா, செபுபோக் பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கபபட்டது.
77 வயதான சோங் நியுக் ஃபான் எனற அந்த முதியவரின் உடல் அவரது நான்கு சக்கர இயக்க வாகனம் கைவிடப்பட்ட இடத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
அந்த முதியவர் காணாமல் போனது குறித்து தீயணைப்புத் துறைக்கு இரவு 9.18 மணிக்கு தகவல் கிடைத்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் இரவு 9.44 மணிக்கு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.
பாதிக்கப்பட்டவரின் வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து 50 மீட்டர் சுற்றளவில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 20 நிமிட தேடுதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர் சாலையோரத்தில் புல்வெளி உயர்ந்து வளர்ந்த புதர் பகுதியில் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி செனாடின் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து சோங் நான்கு சக்கர இயக்க வாகனத்தில் யாருக்கும் தெரிவிக்காமல் புறப்பட்டுச் சென்றதாக அவரது குடும்பத்தினர் நேற்று காவல்துறையில் புகார் செய்திருந்தனர்.
ஜி.பி.எஸ். முறையை பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனையில் செப்டம்பர் 14 ஆம் தேதி அந்த வாகனம் மிரியிலிருந்து பெலகாவுக்கு பயணித்து பின்னர் செப்டம்பர் 17 ஆம் தேதி பத்து நியா சந்திப்புக்குச் சென்றது கண்டறியப்பட்டது.
அதுதான் ஜி.பி.எஸ். வழி கடைசியாகக் கண்டறியப்பட்ட இடம். பின்னர் வாகனம் சாலையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டவர் அதில் காணப்படவில்லை. அந்த முதியவரைத்
அப்பகுதியில் தேட குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனைத் தொடர்ந்து சோங் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதில் உதவி கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
ஒரு வாரத்திற்கு மேல் காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு
22 செப்டெம்பர் 2025, 4:30 AM