கோலாலம்பூர், ஏப்ரல் 20 - நாட்டின் இளம் விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டை மிகவும் நியாயமான, உள்ளடக்கிய மற்றும் விரிவான முறையில் தொடர்ந்து வலுப்படுத்துவதில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு (KBS) உறுதியுடன் இருப்பதாக அதன் துணை அமைச்சர் மோர்டி பிமோல் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தேசிய வுஷு வீராங்கனை ஜாஸ்மின் அலாக்கின் சாதனைப் பயணம், நாட்டின் புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களிடையே இருக்கும் உயரிய போராட்ட குணத்தைப் பிரதிபலிப்பதோடு, பல சவால்களுக்கு மத்தியிலும் வெற்றியை இலக்காகக் கொண்டு செயல்படும் இளைஞர்களுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு இளம் திறமையாளருக்கும் அவர்களின் பின்னணி, இனம் அல்லது இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் வளருவதற்கான சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய துணை அமைச்சர், விளையாட்டில் வெற்றி என்பது வெறும் திறமையை மட்டும் சார்ந்தது அல்ல என்றும், அது சரியான வாய்ப்பு, ஆதரவு மற்றும் வெளிப்படையான கட்டமைப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியது என்றும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற 9-வது உலக குங்ஃபூ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, நாட்டின் முதல் இந்திய வுஷு வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர் ஜாஸ்மின் அலாக் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய திறமையாளர்கள் நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பிலிருந்து விடுபட்டுவிடாமல் இருப்பதை அமைச்சு உறுதி செய்யும் என்று மோர்டி பிமோல் தெரிவித்தார்.
மேலும், விளையாட்டுச் சங்கங்கள், மாநில அரசுகள் மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து முன்னெடுக்கப்படும் வியூகக் கூட்டணிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சி அதிகத் திறனுடன் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ஒழுக்கம், ஆற்றல் மற்றும் விடாமுயற்சி கொண்ட எந்தவொரு திறமையாளரும் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதே அமைச்சின் இலக்கு என அவர் மேலும் உறுதிபடத் தெரிவித்தார்.







