லங்காவியின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அத்தீவிற்கு மீண்டும் முழுமையான வரிவிலக்கா?

19 ஏப்ரல் 2026, 2:58 AM
லங்காவியின் பொருளாதாரத்தை  மேம்படுத்தும் நோக்கில், அத்தீவிற்கு மீண்டும் முழுமையான வரிவிலக்கா?
லங்காவியின் பொருளாதாரத்தை  மேம்படுத்தும் நோக்கில், அத்தீவிற்கு மீண்டும் முழுமையான வரிவிலக்கா?

லங்காவியின் பொருளாதாரத்தை மீண்டும் மேம்படுத்தும் நோக்கில், அத்தீவிற்கு முழுமையான வரிவிலக்கு அந்தஸ்தை மீண்டும் வழங்குவதற்கான திட்டத்தை கவனமாகப் பரிசீலிப்பதாக உறுதியளித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி முகமது நோர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

ஏப்ரல் 13-ஆம் தேதி கெடா மாநில சட்டமன்றத் தொடக்க விழாவில் கெடா சுல்தான் அல் அமினுல் கரீம் சுல்தான் சாலேஹுடின் சுல்தான் பத்லிஷா அவர்கள் வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட இந்த விவகாரத்தில், பிரதமர் காட்டிய நேர்மறையான பதிலுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

இன்று ஷா ஆலாமில் உள்ள ஐடியல் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற வெளியூர்களில் வசிக்கும் கெடா மாநில மக்களுக்கான பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் சனுசி இவ்வாறு கூறினார்.

நேற்று, சுல்தான் சாலேஹுடினின் பரிந்துரைக்கு நன்றி தெரிவித்த அன்வார், லங்காவியின் சுற்றுலாத் துறை சமீப காலமாகச் சற்றே மந்தமாக இருப்பதால், இந்த விஷயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் விளக்கிய சனுசி, முன்னர் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாக இருந்த தனித்துவமான வரிவிலக்குப் பொருட்களின் பற்றாக்குறையே இந்த மந்தநிலைக்கு முக்கியக் காரணம் என்றார்.

இருப்பினும், 2025-ஆம் ஆண்டில் இரண்டு மில்லியனாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை, இந்த ஆண்டு நாற்பது லட்சமாக (நான்கு மில்லியன்) அதிகரிக்க கெடா மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

மற்றொரு செய்தியாக, முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் உட்பட எந்தவொரு தனிநபரும் கெடாவில் மக்கள் பிரதிநிதியாகப் போட்டியிட வருவதை வரவேற்பதாக சனுசி தெரிவித்தார்.

"யார் வேண்டுமானாலும் கெடாவில் வந்து போட்டியிடலாம்... இது ஒரு ஜனநாயக நாடு... கெடாவில் போட்டியிட்டு தங்கள் அதிர்ஷ்டத்தைச் சோதிக்க விரும்பும் எவரையும் நான் வரவேற்கிறேன்," என்றார் அவர்.

முன்னதாக, கெடா பாரிசான் நேஷனலுக்கு கைரி போன்ற ஒரு தலைவர் தேவை என்றும், அவரது சித்தாந்தமும் சிந்தனையும் கெடா மக்களின் சிந்தனைப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கெடா அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் முகமது சஃப்வான் ஜாஃபார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா


original news link :
https://bernama.com/bm/am/news.php?id=2546385

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.