ஷா ஆலம், ஏப்ரல் 16 - மலேசியாவில் மானியம் இல்லாத எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 16 முதல் 22-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்கு, மானியம் இல்லாத டீசல் விலை லிட்டருக்கு 75 சென்கள் குறைக்கப்பட்டு 5 ரிங்கிட் 97 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதன் விலை 6 ரிங்கிட் 72 சென்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மானியம் இல்லாத பெட்ரோல் வகைகளிலும் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், RON97 ரக பெட்ரோல் லிட்டருக்கு 25 சென்கள் குறைக்கப்பட்டு 5 ரிங்கிட் 10 சென்னுக்கு விற்பனை செய்யப்படும். முன்னதாக இது 5 ரிங்கிட் 35 சென்னாக இருந்தது.
மேலும், RON95 ரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு 25 சென்கள் சரிந்து, தற்போது 4 ரிங்கிட் 02 சென்னாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் சரிவைக் கருத்தில் கொண்டு, தானியங்கி விலைக் நிர்ணய முறையின் (APM) கீழ் தீபகற்ப மலேசியாவில் இந்த விலை மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு விளக்கியுள்ளது.
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசாங்கம் தற்போதைய நிலவரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிச்சயமற்ற பொருளாதாரச் சூழலில் இருந்து மக்களைப் பாதுகாக்கவும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும் அரசாங்கம் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், தகுதியுள்ள தரப்பினருக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் மானியங்களை அரசாங்கம் இன்னும் தொடர்ந்து வழங்கி வருகிறது.
இதன்படி, BUDI95 திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மலேசியர்களுக்கு RON95 பெட்ரோல் ஒரு லிட்டர் 1 ரிங்கிட் 99 சென் என்ற சலுகை விலையிலும், அதே வேளையில் சபா, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென் என்ற மானிய விலையிலும் தொடர்ந்து வழங்கப்படும் என்று நிதி அமைச்சின் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.








