ஷா ஆலம், ஏப்ரல் 15 – உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்த கவலைகள் நிலவி வரும் சூழலில், நாடு முழுவதும் உள்ள தனது எரிபொருள் நிலையங்களில் ஜூன் இறுதி வரை போதிய எரிபொருள் இருப்பு இருப்பதை பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (PETRONAS) உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக மே மாதம் இறுதி வரை மட்டுமே விநியோகம் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த காலக்கெடு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் சுமார் 50 விழுக்காட்டைத் தனது துணை நிறுவனமான 'பெட்ரோனாஸ் டகாங்கன் பெர்ஹாட்' (Petronas Dagangan Bhd) மூலம் பெட்ரோனாஸ் பூர்த்தி செய்து வருகிறது. மீதமுள்ள எரிபொருள் தேவையை மலேசியாவில் இயங்கி வரும் பிற எண்ணெய் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
தனது விநியோகச் சங்கிலியைத் தொடர்ந்து மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருவதன் மூலம், அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் தட்டுப்பாடின்றி விநியோகம் கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸ், மக்களுக்குத் தேவையான எரிபொருள் சீராகவும் நம்பிக்கைக்குரிய வகையிலும் கிடைப்பதில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அதே வேளையில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை அன்றாடத் தேவைக்கு ஏற்பப் பொறுப்புணர்வுடன் வாங்க வேண்டும் என்றும், தேவையற்ற 'பீதி கொள்முதல்' (Panic Buying) நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. சிக்கனமான மற்றும் முறையான பயன்பாடு மட்டுமே அனைத்துப் பயனாளர்களும் தொடர்ந்து எரிபொருளைப் பெறுவதை உறுதி செய்யும் என பெட்ரோனாஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேசுகையில், நாட்டின் எரிபொருள் விநியோகம் மே மாதம் வரை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய பெட்ரோனாஸ் அரசாங்கத்திற்குத் துணையாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
தற்போதைய இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.








