செலாயாங், 21 அக்: கோம்பாக்–உலு லங்காட் தெசிய புவியியல் பூங்காவை யுனெஸ்கோ உலக புவியியல் பூங்கா பட்டியலில் சேர்க்கும் விண்ணப்ப செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக, செலாயாங் நகராட்சி மன்றம் RM4.5 மில்லியன் ஒதுக்கீட்டில் வரவிருக்கும் 2026 ஆகஸ்ட் மாதத்துக்கான ஆய்வை முன்னிட்டு, செலாயாங் சூடுநீர் குளம் மேம்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தும் பணிகள் 2026 ஆகஸ்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக செலாயாங் நகராட்சி மன்ற மண்டலம் 12 ஆணையர் யு சின் ஓங் கூறினார். இந்த குளம் புதிய வடிவமைப்பில் ஏழு குளங்கள், ஓய்வு பகுதி, உடை மாற்றும் அறை, உடற்பயிற்சி போன்ற வசதிகள் அமைக்கப்படுகின்றன.
முன்னதாக மலேசிய வனவியல் ஆராய்ச்சி நிறுவனம் சிலாங்கூர் வனப் பூங்காவை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோம்பாக்–உலு லங்காட் புவியியல் பூங்காவும் சிலாங்கூரில் இரண்டாவது சர்வதேச அங்கீகாரம் பெறக்கூடிய தளமாக மாற்றும் என்ற நம்பிக்கையை அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது யுனெஸ்கோ அங்கீகாரம் பெறுவதற்கான செயல்முறை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆகஸ்ட் மாதம் யுனெஸ்கோ குழு நேரடியாக தளத்தை ஆய்வு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்குமுன், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்கள் 2024-ஆம் ஆண்டு கோம்பாக்–உலு லங்காட் புவியியல் பூங்காவை சிலாங்கூரின் முதல் தேசிய புவியியல் பூங்காவாக அறிவித்திருந்தார். சுமார் 112,955 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் 31 புவியியல் தளங்கள் உள்ளன. இதில் 20 தளங்கள் உயர் சுற்றுலா திறன் கொண்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
கோம்பாக்–உலு லங்காட் புவியியல் பூங்கா 2028க்குள் யுனெஸ்கோ உலக புவியியல் பூங்கா அங்கீகாரம் பெறும் இலக்குடன் மாநிலம் முன்னேறி வருகிறது என்று சிலாங்கூர் மாநில உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் தெரிவித்தார்.