சிலாங்கூர் 'ஸ்மார்ட் சேவா' வீட்டு வாடகைத் திட்டம்: 99.9 சதவீத வாடகை வசூலுடன் சாதனை படைக்கும் மாநில அரசு

11 ஏப்ரல் 2026, 3:05 AM
சிலாங்கூர் 'ஸ்மார்ட் சேவா' வீட்டு வாடகைத் திட்டம்: 99.9 சதவீத வாடகை வசூலுடன் சாதனை படைக்கும் மாநில அரசு

ஷா ஆலம், ஏப்ரல் 11: சிலாங்கூர் மாநில அரசின் ‘ஸ்மார்ட் சேவா’ (Smart Sewa) வீட்டு வாடகைத் திட்டத்தின் கீழ் வாடகை வசூலிப்பு விகிதம் 99.9 சதவீதத்தை எட்டியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வாடகையாளர்களின் உயர்ந்த ஒழுக்கத்தையும் பொறுப்புணர்வையும் இது பிரதிபலிப்பதாகச் சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்து நிறுவனம் (PHSSB) தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் சொத்து மற்றும் மதிப்பீட்டு மேலாளர் ரஹிமா யூசோப் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தச் சாதனைத் தொடர்வதாகத் தெரிவித்தார்.

கடந்த 2026 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான தரவுகளின்படி, 2020 முதல் 2024-ஆம் ஆண்டு வரை வாடகை வசூலிப்பு விகிதம் 99.8 முதல் 99.9 சதவீதமாக மிகவும் நிலையாக இருந்துள்ளது. அதே வேளையில், கடந்த 2025-ஆம் ஆண்டிலும் மிகக் குறைந்த நிலுவைத் தொகையுடன் 99.4 சதவீத வசூலைப் பெற்றுள்ளதாகவும் அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று போன்ற கடுமையான பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் இந்தச் சிறப்பான செயல்பாடு சாத்தியமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் அரசாங்கம் வழங்கிய வாடகைச் சலுகைகள் (Moratorium) ஒட்டுமொத்த வசூலிப்பைப் பாதிக்கவில்லை என்றும், இது மாநில அரசின் கொள்கை எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை நிரூபித்துள்ளதாகவும் ரஹிமா சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்தின் கீழ் வாடகைதாரர்கள் தங்கள் வாடகை ஒப்பந்தக் காலம் முடிந்த பிறகு, அவர்கள் செலுத்திய நிகர வாடகைத் தொகையிலிருந்து 30 சதவீதம் வரையிலான தொகையைத் திரும்பப் பெற முடியும். இந்தச் சலுகையே வாடகையாளர்கள் முறையாகவும் ஒழுக்கமாகவும் வாடகையைச் செலுத்த ஒரு முக்கியத் தூண்டுகோலாக அமைகிறது.

இவ்வாறு திரும்பப் பெறப்படும் தொகையானது, அவர்கள் எதிர்காலத்தில் ஒரு சொந்த வீட்டை வாங்குவதற்கான முன்பணமாகவோ அல்லது மறைமுகச் சேமிப்பாகவோ அமையும் என்று அவர் விளக்கினார். இதன் மூலம் வாடகையாளர்கள் தாங்கள் செலுத்தும் வாடகையின் ஒரு பகுதியைத் தங்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் மூலதனமாக மாற்றிக் கொள்கின்றனர்.

இத்திட்டம் குறைந்த வாடகையில் வீடுகளை வழங்குவது மட்டுமன்றி, சிலாங்கூர் மக்களின் நிதி நிலையை மேம்படுத்தி நீண்டகால வீட்டு உரிமையாளராக மாறவும் வழிவகை செய்கிறது.

சிலாங்கூர் மாநில அரசின் இந்த 'ஸ்மார்ட் சேவா' திட்டம், இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான ஒப்பந்த அடிப்படையில் செயல்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.