ஷா ஆலம், ஏப்ரல் 10: சிலாங்கூர் மாநில அரசின் பெருந்திட்டமான 'ஜோப்கேர்' (JobCare), வேலைவாய்ப்புத் சந்தை இந்த ஆண்டிற்கான முதல் தொடரை நாளை கோலா லங்காட் மாவட்டத்தில் தொடங்குகிறது.
பந்திங், MCS கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த வேலைவாய்ப்பு சந்தை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.
சிலாங்கூர் மாநில அரசாங்கம், மாநில சமூக பாதுகாப்பு அமைப்பான 'பெர்கேசோ' (PERKESO) உடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வை, மனிதவளத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பார்.
பல்வேறு துறைகளைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தக் கருத்தரங்கம் வெறும் வேலைவாய்ப்புத் தகவல்களை வழங்கும் இடமாக மட்டுமில்லாமல், வேலை தேடுபவர்கள் நேரடியாக முதலாளிகளைச் சந்தித்து நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பையும் வழங்குகிறது.
எனவே, இதில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர்களும் பொதுமக்களும் தங்களின் சுயவிவரக் குறிப்பு (Resume), கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் https://myfuturejobs.gov.my/event/karnival-jelajah-lindung-kerjaya-jobcare-daerah-kuala-langat எனும் அகப்பக்கத்தின் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மாநிலம் தழுவிய ரீதியில் இந்த ஆண்டு மொத்தம் ஒன்பது இடங்களில் இந்த 'ஜோப்-கேர்' பயணத்தை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதன் முதல் அங்கமாகவே கோலா லங்காட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சுமார் 40,000 வேலை வாய்ப்புகளை இலக்காகக் கொண்டுள்ள இந்நிகழ்வில் , 'ஜோப்கேர் ஸ்பெஷல்' மற்றும் 'ஜோப்கேர் பிரீமியம்' என இரு முக்கிய பிரிவுகள் இடம்பெறவுள்ளன.
முன்னதாக, 2026-ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது, மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இத்திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் நோக்கில், அடுத்த ஆண்டு இத்திட்டத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் திட்டங்களும் இணைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நோக்கத்திற்காக மாநில அரசு ஒரு மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








