இலகு ரயில் பழுதுபார்ப்பு பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால், பயணிகள் மாற்று ரயில்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்

10 ஏப்ரல் 2026, 3:09 AM
இலகு ரயில் பழுதுபார்ப்பு பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால், பயணிகள் மாற்று ரயில்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்

ஷா ஆலம், ஏப்ரல் 10: அம்பாங் மற்றும் ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடங்களுக்கான எல்.ஆர்.டி (LRT) ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சான் சோ லின் (Chan Sow Lin) ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தண்டவாள சுவிட்ச் கோளாறு காரணமாக இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரேபிட் ரயில் (Rapid Rail) நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீரமைப்புப் பணிகள் முழுமையாக முடிவடையும் வரை மாற்று ரயில் சேவைகள் தொடரும் என அறிவித்துள்ளது.

இதன்படி, அம்பாங் நிலையத்திலிருந்து வரும் ரயில்கள் சான் சோ லின் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து மீண்டும் திரும்பிச் செல்லும். இந்த ரயில்கள் சுமார் ஆறு நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகளுக்கான வழிகாட்டல்களையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அம்பாங் நோக்கிச் செல்லும் பயணிகள் சான் சோ லின் நிலையத்தின் 1B மற்றும் 2B நடைமேடைகளில் ரயில்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதேபோல், அம்பாங்கிலிருந்து செந்துல் தீமோர் நோக்கிச் செல்லும் பயணிகள் சான் சோ லின் நிலையத்தின் 1A நடைமேடையில் இறங்கி ரயில்களை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், செந்துல் தீமோர் மற்றும் புத்ரா ஹைட்ஸ் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை எவ்விதப் பாதிப்பும் இன்றி வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான உதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்க கூடுதல் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், பயணத் தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க நிலையங்களில் அவ்வப்போது அறிவிப்புகளும் செய்யப்பட்டு வருகின்றன. பயணிகள் தங்களின் பயணத்தைத் திட்டமிட ஏதுவாக, ரேபிட் கே.எல் (Rapid KL) சமூக ஊடகப் பக்கங்கள் அல்லது 'MyRapid PULSE' செயலியைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முன்னதாக, அவான் பெசார் மற்றும் ஸ்ரீ பெட்டாலிங் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மின் விநியோகத் தடையால் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பயணிகள் தடையின்றிப் பயணிக்க ஏதுவாக இலவசப் பேருந்துச் சேவைகள் மற்றும் மாற்று ரயில் வழித்தடங்களை ரேபிட் ரயில் நிறுவனம் உடனடியாகச் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.