ஷா ஆலம், ஏப்ரல் 8 – நாடு முழுவதும் உள்ள பள்ளி விடுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் MyStep திட்டத்தின் கீழ் 300 விடுதி வார்டன் உதவியாளர்கள் (MyPWA) நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இவர்கள் அந்தந்தப் பள்ளிகளில் தங்களின் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நியமனம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், குறிப்பாக இரவு நேரங்களில் மாணவர்களின் பாதுகாப்பைக் கண்காணிப்பதில் இந்த வார்டன் உதவியாளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என்றார்.
விடுதி மாணவர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் நல்வாழ்வை மேலும் வலுப்படுத்துவதே இந்த முன்னெடுப்பின் முதன்மை நோக்கமாகும் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் (KPM) கீழ் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் பாதுகாப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஒரு முயற்சியாக இந்த MyPWA திட்டம் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், இந்த அதிரடி நடவடிக்கை 2026-2035-ஆம் ஆண்டுக்கான மலேசியக் கல்வித் திட்டத்தின் (RPM) அபிலாஷைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது.
ஆசிரியர்கள் தங்களின் முழுக் கவனத்தையும் கற்றல் மற்றும் கற்பித்தல் (PdP) சார்ந்த நடவடிக்கைகளில் செலுத்துவதற்கு ஏதுவாக, விடுதி மேலாண்மை போன்ற கூடுதல் பொறுப்புகளில் இருந்து அவர்களுக்கு இந்தத் திட்டம் பெரும் உதவியாக அமையும் என அமைச்சர் ஃபட்லினா சிடேக் மேலும் விளக்கமளித்தார்.








