ஷா ஆலம், ஏப்ரல் 3: மத்திய ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, மலேசியாவின் பொதுத்துறை ஊழியர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் (BDR) சிறப்புத் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் வரும் ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்து பொதுச் சேவைத் துறையின் (KPPA) தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ வான் அகமது தஹ்லான் அப்துல் அஜீஸ் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடையிலான ஒருவழிப் பயணத் தூரம் 8 கிலோமீட்டருக்கும் அதிகமாக இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே இந்தச் சிறப்பு அனுமதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய நடைமுறையானது வாரத்தில் மூன்று நாட்களுக்கு முழு நேரப் பணியாக அமையும். ஞாயிற்றுக்கிழமையை வார விடுமுறையாகக் கொண்ட மாநிலங்களில், செவ்வாய் முதல் வியாழன் வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம்.
அதேவேளையில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளை வார விடுமுறையாகக் கொண்ட கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில், திங்கள் முதல் புதன் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.
இருப்பினும், நாட்டின் அத்தியாவசியத் துறைகளான பாதுகாப்புப் படைகள், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் பணியாற்றுவோருக்கு இந்த வீட்டிலிருந்து பணியாற்றும் முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மனித வளச் சேவை சுற்றறிக்கையின் (PPSM) கீழ் உள்ள 'வீட்டிலிருந்தே பணியாற்றும் கொள்கை' (SR4.1.2) விதிகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.
ஊழியர்களின் வேலைத்திறனை உறுதி செய்யும் நோக்கில் சில கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் காலத்தில், மனித வள தகவல் மேலாண்மை அமைப்பில் (HRMIS) பதிவு செய்யப்பட்ட முகவரியில் மட்டுமே இருக்க வேண்டும்.
மேலும், 'SPOT-Me' செயலி வாயிலாக தங்களின் இருப்பிடத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை வருகையைப் பதிவு செய்வது அவசியமாகும். ஊழியர்கள் முறையாகப் பணியில் ஈடுபடுவதைக் கண்காணிக்கும் பொறுப்பு அந்தந்தத் துறைத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கவும், பொதுச் சேவைத் துறையின் சீரான இயக்கத்தை உறுதிப்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








