மேற்கு ஆசிய உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்ள சிலாங்கூர் சிறப்பு பணி படையை அமைக்கிறது

2 ஏப்ரல் 2026, 2:24 AM
மேற்கு ஆசிய உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்ள சிலாங்கூர் சிறப்பு பணி படையை அமைக்கிறது

ஷா ஆலம், ஏப்ரல் 1: மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து ஏற்படும் உலகளாவிய நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வதில் சிலாங்கூரின் தயார் நிலையை வலுப்படுத்த, மாநில அரசு ஒரு சிறப்பு பணி படையை அமைக்கும் என்று டத்தோ மந்திரி புசார் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை, உலகளாவிய நெருக்கடியின் விளைவுகளைச் சமாளிக்க கூட்டரசு அரசாங்க முயற்சிகளை ஆதரிப்பதற்கான ஒரு விரிவான மாநில அளவிலான செயல் திட்டத்தின் தொடக்கமாகும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் சம்பந்தப்பட்ட மோதல் தொடர்ந்து நீடிப்பதால் பொருளாதாரத்தில் பெரும் தாக்கங்கள் ஏற்படுகின்றன என்றும், எனவே முறையான ஆரம்பகட்ட தயாரிப்பு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்."அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் சம்பந்தப்பட்ட போர் தொடர்ந்து நடை பெற்று வருவதால், மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் சிலாங்கூரின் பொருளாதாரம் மற்றும் மக்கள் மீதான அதன் தாக்கங்கள் குறித்து விவாதிக்க இன்று காலை மாநில ஆட்சிக் குழுவின் (MMKN) சிறப்பு வட்டமேசை கூட்டத்திற்கு நான் அழைப்பு விடுத்தேன்," என்று அவர் கூறினார்.

"தற்போதைய மோதலின் விளைவுகள் குறித்த பகுப்பாய்வு மற்றும் ஆரம்ப கணிப்புகளைப் பகிர்ந்து கொள்ள இந்த சிறப்புக் கூட்டத்தில் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் வல்லுநர்கள் ஒன்று கூடினர்.

"நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (KDNK) 26.2 விழுக்காடு பங்களிக்கும் முக்கிய மாநிலமாக, சிலாங்கூர் உள்ளதால் இங்கு ஏற்படும் எந்த ஒரு தாக்கமும் மலேசியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் நேரடி விளைவை ஏற்படுத்தும்," என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.

கோவிட்-19 தொற்றுநோய், டிசம்பர் 2021 பெரும் வெள்ளப் பேரழிவு மற்றும் எரிவாயுக் குழாய் வெடிப்பு சம்பவங்கள் போன்ற கடந்தகால அனுபவங்கள், துல்லியமான தரவு மற்றும் தகவல்களின் அடிப்படையில் மாநிலத்தின் தயார் நிலையை வலுப்படுத்துவதில் முக்கிய பாடங்களாக அமைகின்றன என்று அமிருடின் கூறினார்.

"இந்த நெருக்கடியில் நேரடியாக ஈடுபட்டுள்ள பல அரசுக்கு சொந்தமான துணை நிறுவன தலைவர்களும் கலந்து கொண்டனர்.""ஒவ்வொரு சவாலிலும், சிலாங்கூர் மாநில அரசும் மக்களும் எப்போதும் ஒன்றிணைந்து செயல் பட்டு, மீண்டு வந்துள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூரில் உள்ள மக்களுக்கும் தொழில் துறையினருக்கும் உதவும் வகையில், ஒவ்வொரு தயாரிப்பும் உண்மைகள் மற்றும் சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் விரிவாக மேற் கொள்ளப்படும் என்பதை மாநில அரசு உறுதி செய்யும் என்று அவர் வலியுறுத்தினார்.

"தங்கள் கருத்துகளையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொண்ட டத்தோ டாக்டர் சுனிகா முகமது, டான்ஸ்ரீ முஹம்மது இப்ராஹிம், டாக்டர் நுங்சாரி அஹ்மட் ராதி, பேராசிரியர் டாக்டர் ஃபார் கிம் பெங், திரு அக்பர் எம்.டி. தாயூப் மற்றும் பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் அஸ்லான் கசாலி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்," என்று அவர் குறிப்பிட்டார்.

கூட்டரசு மட்டத்தில் திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளை ஆராய, நாளை பிரதமருடன் நடைபெறும் மந்திரி புசார்கள் மற்றும் முதலமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக அமிருடின் கூறினார்.

"இதனைத் தொடர்ந்து, குறிப்பாக நலிவடைந்த பிரிவினருக்கு விரிவான முறையில் உதவுவதற்கான சிறந்த முறைகளை ஒருங்கிணைக்கவும், தொழில்துறைக்கு பயனுள்ள ஆதரவை உறுதி செய்யவும் இந்த வெள்ளிக்கிழமை மாநில அரசு மட்டத்தில் ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்படும்.

"இந்தச் சிறப்பு பணி படையை அமைப்பதும், தொடர்ச்சியான கூட்டங்களை நடத்துவதும், திட்டமிடப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் ஒழுங்கமைக்கப்பட்ட, பதிலளிக்கக்கூடிய மற்றும் உலகப் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் பயனுள்ள வகையில் செயல்படுத்தப் படுவதை உறுதி செய்யும்," என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.