2027 ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றில் வியட்நாமிடம் 1-3 என்ற கோல் கணக்கில் மலேசியா தோல்வி.

1 ஏப்ரல் 2026, 2:13 AM
2027 ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றில் வியட்நாமிடம் 1-3 என்ற கோல் கணக்கில் மலேசியா தோல்வி.

கோலாலம்பூர் ஏப் 1 ; வியட்நாமிடம் 1-3 என்ற கோல் கணக்கில் மலேசியா தோல்வி கண்டதைத் தொடர்ந்து, 2027 ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றில் அதன் பயணம் ஒரு சோகமான முடிவுக்கு வந்தது.

நாம் டின், தியென் ட்ரூங் அரங்கில் நடைபெற்ற எஃப் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் இந்தத் தோல்வி பதிவானது. ஆட்டத்தின் தொடக்கத்தி-லேயே, ஆறாவது நிமிடத்தில் வியட்நாம் அணித்தலைவர் டோ டுய் மான் தலையால் முட்டி தனது அணியின் முதல் கோலைப் பதிவு செய்தார்.

ட்ரூங் தியென் ஆன் எடுத்த கார்னர் கிக்கை அவர் கோலாக மாற்றினார்.ஹரிமாவ் மலாயா அணிக்கு 10-வது நிமிடத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பாலோ ஜோசுவே வழங்கிய பந்தை முகமது ஃபைசால் அப்துல் ஹலிம் கோலாக்கத் தவறினார்.

பின்னர் 24-வது நிமிடத்தில், வியட்நாமின் நுயென் ஹோவாங் டுக் தூரத்திலிருந்து அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. மலேசிய கோல் காப்பாளர் அகமது ஷிஹான் ஹஸ்மி தடுமாறிய போதிலும் அதிர்ஷ்டவசமாக கோல் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், 32-வது நிமிடத்தில் டோ ஹோவாங் ஹென் அடித்த பந்தை ஷிஹான் சிறப்பாகத் தடுத்து, முதல் பாதியில் 0-1 என்ற நிலையில் ஆட்டம் தொடர வழிவகுத்தார்.

இரண்டாம் பாதியின் தொடக்கத்தில், 51-வது நிமிடத்தில் வியட்நாமின்  வீரர் நுயென் சுவான் சோன் தலையால் முட்டி இரண்டாவது கோலை அடித்தார். தொடர்ந்து 59-வது நிமிடத்திலும், தியென் ஆன் வழங்கிய பந்தை மீண்டும் தலையால் முட்டி சுவான் சோன் மூன்றாவது கோலை அடித்தார்.

இதன்வழி, கிம் சாங் சிக் தலைமையிலான வியட்நாம் அணி 3-0 என வலுவான முன்னிலை பெற்றது. இறுதியாக, 77-வது நிமிடத்தில் மாற்று வீரர் எண்ட்ரிக் டோஸ் சாண்டோஸ் பெனால்டி வாய்ப்பை கோலாக்கி மலேசியாவின் ஒரே ஆறுதல் கோலைப் பதிவு செய்தார்.

இந்தத் தோல்வியின் மூலம், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு வியட்நாம் மண்ணில் வெற்றி பெற முடியாத மலேசியாவின் சோகமான சாதனை தொடர்கிறது. ஆறு ஆட்டங்களுக்குப் பிறகு, ஏற்கனவே ஆசியக் கிண்ண இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட வியட்நாம் 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மலேசியா ஒன்பது புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

லாவோஸ் ஆறு புள்ளிகளுடனும், நேபாளம் மூன்று புள்ளிகளுடனும் முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆசியக் கிண்ண இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் மலேசியாவின் நம்பிக்கை, ஆசியக் காற்பந்து கூட்டமைப்பு (AFC) விதித்த புள்ளி குறைப்பு நடவடிக்கையால் கடைசி நேரத்தில் தகர்ந்தது.

கடந்த ஆண்டு நேபாளம் மற்றும் வியட்நாமுக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் தகுதியற்ற வீரரைக் களமிறக்கியதன் மூலம், ஆசியக் காற்பந்து கூட்டமைப்பின் ஒழுங்கு மற்றும் நெறிமுறை விதிகளின் 56-வது பிரிவை மலேசியக் காற்பந்து சங்கம் (FAM) மீறியதாக AFC-யின் ஒழுக்காற்று மற்றும் நெறிமுறைக் குழு கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.