கோலாலம்பூர், மார்ச் 31: மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், நாட்டின் எரிபொருள் விநியோகத்தைப் பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (Petronas) நிறுவனம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
ஈரான் மீதான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது அதன் முழுமையான தாக்கம் எப்படி இருக்கும் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தொழில் துறையினரும் பொதுமக்களும் எரிசக்தியை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பெட்ரோனாஸ் வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில் பொதுமக்கள் தேவையற்ற பீதிக்குள்ளாகி எரிபொருளை அளவுக்கு அதிகமாக வாங்கிச் சேமிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அத்தகையச் செயல்கள் இந்த நெருக்கடியின் பாதிப்பை மேலும் மோசமாக்கும் என்றும் தேசிய எண்ணெய் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மலேசியா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருந்தபோதிலும், உலகளாவிய இந்த நெருக்கடியின் தாக்கத்திலிருந்து நாடு முற்றிலும் தப்பித்துவிட முடியாது என்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, மலேசியாவின் கச்சா எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகவே கொண்டு வரப்படுகிறது. இந்தப் போர்ச் சூழல் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெய்ப் விலை சுமார் 40 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, சர்வதேச கப்பல் போக்குவரத்துச் செலவுகள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் விநியோகம் தொடர்பான தளவாடச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இத்தகைய மாற்றங்கள் மலேசியாவின் எரிபொருள் விநியோகப் பாதுகாப்பில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகப் பெட்ரோனாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டின் எரிபொருள் தேவை உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகவே இருந்து வருகிறது. இருப்பினும், தனது ஒருங்கிணைந்த மதிப்புச் சங்கிலி மற்றும் துணை நிறுவனங்களின் வாயிலாக, சந்தையில் தனக்குள்ள 50 விழுக்காடு பங்களிப்பைத் தக்கவைக்கவும், 2026 மே மாதம் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தைப் போதுமான அளவில் உறுதி செய்யவும் பெட்ரோனாஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. மீதமுள்ள தேவையை மலேசியாவில் இயங்கும் இதர எண்ணெய் நிறுவனங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.
உலகளாவிய விலை உயர்வு அழுத்தங்கள் இருந்தபோதிலும், மலேசிய அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் காரணமாக ரோன்95 (RON95) மற்றும் டீசல் விலைகள் இப்பிராந்தியத்திலேயே மிகக் குறைந்த அளவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இது பொதுமக்களுக்குப் பெரும் சுமையாக மாறாமல் தடுக்க உதவுகிறது. சாத்தியமான விநியோகத் தடைகளை நிர்வகிப்பதற்கும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அரசாங்கத்துடனும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவதாக பெட்ரோனாஸ் உறுதி அளித்துள்ளது.







