கிள்ளான், ஜூன் 28: கிள்ளான் அரச மாநகர் மன்றம் (MBDK) ஏற்பாடு செய்திருந்த "மலையேறுவோம், ஆரோக்கியத்தைப் பேணுவோம்" (Jom ‘Hike’ Sihat Fest 2026) நிகழ்ச்சி, மக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதில் பெரும் நன்மையளிப்பதால், இது போன்ற திட்டங்களை அவ்வப்போது தொடர்ந்து நடத்த வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.
தனியார் நிறுவன ஊழியரான நூர்ஃபாத்தின் கிஸ்தினா அஸ்மான் (வயது 35) கூறுகையில், குடும்பத்துடன் உடற்பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவும் இந்த நிகழ்ச்சி நல்லதொரு வாய்ப்பை வழங்கியது என்றார்.
"என் பிள்ளைக்கு மலையேற்றத்தில் (hiking) ஆர்வம் உள்ளதால், அவனுக்கு ஆதரவு தெரிவிக்கவே நான் இங்கு வந்தேன். ஆனால், இங்கு இவ்வளவு சுவாரசியமான நிகழ்ச்சிகள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பிள்ளைக்காகக் காத்திருந்த நேரத்தில், நானும் என் கணவரும் உடனே எங்கள் உடல் நலனைப் பரிசோதித்துக் கொண்டோம்.” என அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்த நிகழ்ச்சி தமக்கும் தமது நண்பர்களுக்கும் மலையேற்றம், ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி மற்றும் ஜும்பா உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபட நல்லதொரு வாய்ப்பை வழங்கியதாக 58 வயதுடைய பங்கேற்பாளர் எமி லோ கூறினார்.
“நாங்கள் அதிகாலையிலேயே தொடங்கினோம். இலவச மருத்துவப் பரிசோதனை உட்பட அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்றோம். வயது கூடிக்கொண்டே போவதால், நல்ல ஆரோக்கியத்தைப் பேண இது போன்ற திட்டங்களை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, தாமான் ராக்யாட்டில் (Taman Rakyat) நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கிள்ளான் மாநகர் மன்றத் தலைவர் அப்துல் ஹமீத் ஹுசேன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு வயதினரைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.







