சீபீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நில விவகாரம் குறித்து வீண் ஊகங்களை வெளியிட வேண்டாம் - பாப்பாராய்டு

26 மார்ச் 2026, 8:45 AM
சீபீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நில விவகாரம் குறித்து வீண் ஊகங்களை வெளியிட வேண்டாம் - பாப்பாராய்டு

ஷா ஆலாம், மார்ச் 26: சுபாங் ஜெயா, சீபீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நில விவகாரம் தற்போது சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இறுதிக்கட்டத் தீர்வை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இது குறித்து எந்தவொரு தரப்பும் வீண் ஊகங்களை வெளியிட வேண்டாம் என மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பௌத்தம், கிறித்தவம், இந்து, சீக்கியம் மற்றும் தாவோயிசம் ஆகிய மதங்களுக்கான குழுவின் (LIMAS) இணைத் தலைவர் வி. பாப்பாராய்டு, சம்பந்தப்பட்ட நிலம் அதிகாரப்பூர்வமாக சமய நோக்கங்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.

தற்போது இந்த விவகாரம் மாநில அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக இறுதி நிலையில் உள்ளது. இச்சமயத்தில், உண்மைக்கு மாறான கருத்துக்களையோ அல்லது தேவையற்ற ஊகங்களையோ வெளியிடுவது தற்போது சுமூகமாக நடைபெற்று வரும் தீர்வு நடவடிக்கைகளைப் பாதிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

இது தொடர்பாகத் தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாப்பாராயுடு, தவறான தகவல்கள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், அனைவரும் பொறுப்புடன் செயல்படுமாறு வலியுறுத்தினார்.

வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கும் பாப்பாராய்டு, இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு தரப்பினருக்கும் விளக்கம் அளிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும், இதில் முழுப் பொறுப்புடன் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுத்திருந்த கோரிக்கையில், வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவது தொடர்பான கூட்டரசு அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து மாநில அரசாங்கங்களும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

அரசியல் வேறுபாடுகளைக் களைந்து, வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சிக்கல்களுக்குத் தெளிவான கொள்கைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.