ஈரான் - மலேசியா வெளியுறவு அமைச்சர்கள் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை

25 மார்ச் 2026, 7:17 AM
ஈரான் - மலேசியா வெளியுறவு அமைச்சர்கள் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை

தெஹ்ரான், மார்ச் 25 - மத்திய கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் ஆகியோருக்கு இடையே இன்று முக்கியத்துவமிக்க தொலைபேசி உரையாடல் ஒன்று நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் சமீபத்திய போர்ச் சூழல் குறித்து இந்த உரையாடலில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக 'மெஹ்ர்' (Mehr) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து ஈரான் மீது தொடுக்கப்பட்டுள்ள போரினால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார விளைவுகள் குறித்து இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

குறிப்பாக, ஈரானின் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மனிதநேயமற்றவை என்று குறிப்பிட்ட அமைச்சர் அராக்சி, தனது நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க ஈரான் எத்தகைய உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்காது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானைத் தாக்குவதற்காகப் பிராந்தியத்திலுள்ள இதர நாடுகளின் ராணுவத் தளங்களையும் வசதிகளையும் பயன்படுத்துவது குறித்து அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டுத் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர ஈரானுக்கு வேறு வழியில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதில் ஈரான் உறுதியாக இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என அவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானிடம் வலியுறுத்தினார்.

மேலும், அமெரிக்கா மற்றும் சியோனிச ஆட்சியின் ராணுவ அத்துமீறல்களால் ஹோார்முஸ் நீரிணையில் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு, பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் ஸ்திரத்தன்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச சட்டங்களின் கீழ் தனது நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க ஈரான் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அவர், தற்போதைய பாதுகாப்பற்ற சூழலுக்கு அமெரிக்காவின் தன்னிச்சையான நடவடிக்கைகளே காரணம் எனச் சாடினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.