ஷா ஆலம், மார்ச் 24 – மலேசியாவில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள், தங்களின் கல்வியில் பின்தங்கி விடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் 'மருத்துவமனை பள்ளி' (Sekolah Dalam Hospital - SDH) திட்டத்தின் மூலம் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
தரமான கல்வியைப் பெறுவது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்பதைச் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கல்வி அமைச்சு மிகுந்த உறுதியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியை உறுதி செய்ய, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு (KKM) மற்றும் உயர் கல்வி அமைச்சு (KPT) ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
2011-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ், தற்போது நாடு முழுவதும் 20 மருத்துவமனைகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளின் ஒரு பகுதியாக, அண்மையில் பினாங்கு மாநிலத்தின் முதல் மையமாக செபராங் ஜெயா மருத்துவமனையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உள்ளடக்கிய கல்வியை வழங்கும் அரசாங்கத்தின் இடைவிடாத முயற்சியைப் பிரதிபலிக்கிறது என்று அமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கோலாலம்பூர் மருத்துவமனை, அம்பாங், செர்டாங், செலாயாங் மருத்துவமனைகள் மற்றும் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் (PPUM), தேசிய பல்கலைக்கழக மருத்துவ மையம் (PPUKM) உள்ளிட்ட நாட்டின் முக்கிய மருத்துவமனைகளில் இத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
மேலும், நெகிரி செம்பிலான், பகாங், திரங்கானு, ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளிலும் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வரும் இத்திட்டம், மாணவர்கள் தங்களின் உடல்நலக் குறைபாடுகளைப் பொருட்படுத்தாமல் கல்வியைத் தொடர வழிவகுக்கிறது. இது 2026-2035 ஆம் ஆண்டுக்கான மலேசியக் கல்வித் திட்டத்தின் (RPM) இலக்குகளுக்கு ஏற்ப, உயர்தரக் கல்வியை அனைவருக்கும் தடையின்றி கொண்டு சேர்க்கும் அரசாங்கத்தின் கொள்கையோடு ஒத்துப்போவதாக அமைச்சர் ஃபட்லினா சிடெக் மேலும் கூறினார்.








