தற்காலிகப் பட்டாசு கடைகளுக்கான SOP விதிமுறைகளை மறுஆய்வு செய்ய உத்தரவு

24 மார்ச் 2026, 3:53 AM
தற்காலிகப் பட்டாசு கடைகளுக்கான SOP விதிமுறைகளை மறுஆய்வு செய்ய உத்தரவு

கோலாலம்பூர், மார்ச் 24 – மலேசியாவில் பண்டிகைக் காலங்களில் அமைக்கப்படும் தற்காலிகப் பட்டாசு கடைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) உடனடியாக மறுஆய்வு செய்யுமாறு மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) மற்றும் உள்ளாட்சி அரசுத் துறைக்கு (JKT) உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பண்டிகைகளைக் கொண்டாடுவதை உறுதி செய்யவும், தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், ஒவ்வொரு வணிகரும் முழுப் பொறுப்புணர்வுடன் செயல்படுவதையும், உள்ளூர் சமூகத்தின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும் உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.

புதிய வழிகாட்டுதல்களின்படி, பட்டாசு கடைகளுக்கு இடையே போதிய பாதுகாப்பு இடைவெளி இருக்க வேண்டும் என்றும், நிரந்தரக் கட்டிடங்கள் அல்லது குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் இக்கடைகள் அமையாதவாறு இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனுமதி பெற்ற ஒவ்வொரு பட்டாசு கடையிலும், அவசர காலங்களில் தீயை அணைக்கக் கூடிய செயல்பாட்டு நிலையில் உள்ள தீயணைப்புக் கருவிகள் (Fire Extinguishers) கட்டாயம் இருக்க வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் கொண்டாட்டம் ஆகிய இரண்டும் இணைந்து செல்ல வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், இதன் மூலம் மலேசியர்கள் பாதுகாப்பான சூழலில் பண்டிகையை மகிழ்வுடன் கழிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு விற்பனை நிலையங்களில் தீ விபத்துகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் உள்ள தாமான் பெக்காகாவில் பட்டாசு கடை ஒன்று தீப்பற்றி எரிந்ததில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் அருகிலுள்ள வீடுகளின் குளிர்சாதனப் பெட்டிகள் சேதமடைந்தன.

அதேபோல், ஜோகூர் பாரு, ஜாலான் புங்கா ரோஸ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பட்டாசு கடை, புரோட்டோன் ஜென்-2 கார் மற்றும் உணவு டிராக் (Food Truck) ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இத்தகைய விபத்துகளைக் கருத்தில் கொண்டே புதிய பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்படவுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.