கோலாலம்பூர், மார்ச் 20 – ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் உள்ளிட்ட சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு குறைபாடுகளைத் தொடர்ந்து, அதன் பயனர்கள் தங்களது iOS மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு (Update) மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM) அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய பாதுகாப்புத் திருத்தங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, "DarkSword" என்று அழைக்கப்படும் ஒரு அபாயகரமான ஊடுருவல் சங்கிலித் தொடர் (exploit chain) ஐபோன் உள்ளிட்ட iOS சாதனங்களைப் பாதிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள் குறைபாட்டைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் ஒரே நேரத்தில் பல வழிகளில் சாதனங்களுக்குள் ஊடுருவ முடியும் என்றும், இதன் மூலம் அனுமதியின்றி சாதனங்களைக் கட்டுப்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்களது சாதனங்களை சமீபத்திய iOS பதிப்பிற்குப் புதுப்பிக்கத் தவறினால், பின்வரும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சந்திக்க நேரிடும் என்று ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது:
தனிப்பட்ட தகவல்கள் மற்றும் சாதனத் தரவுகளை அனுமதியின்றி மற்றவர்கள் திருடுதல்
உளவு மென்பொருட்கள் (Spyware) அல்லது மால்வேர் (Malware) போன்ற நச்சு மென்பொருட்கள் ஊடுருவுதல்
குறுஞ்செய்திகள், கோப்புகள் மற்றும் ரகசியத் தரவுகள் திருடப்படுதல்
சாதனம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் (Surveillance) அபாயம் ஏற்படுதல்
இதனைத் தவிர்க்க, பயனர்கள் தங்களது ஐபோன்களில் 'தானியங்கி புதுப்பிப்பு' (Automatic Updates) வசதியைச் செயல்படுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், சந்தேகத்திற்குரிய இணையதளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ 'App Store' மூலம் மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மென்பொருளைப் புதுப்பித்த பிறகு சாதனத்தை ஒருமுறை 'Restart' செய்வது நல்லது என்றும், சாதனத்தில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான மாற்றங்கள் தென்படுகிறதா என்பதைக் கூர்ந்து கவனிக்குமாறும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பான டிஜிட்டல் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதோடு, அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்பாமல் அரசு நிறுவனங்களின் முறையான அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு SKMM வலியுறுத்தியுள்ளது.





