மலாக்கா: கோத்தா ஷாபண்டாரில் உள்ள ஒரு கரோக்கே மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கர்ப்பிணியான தனது மனைவியைத் தாக்கியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரைப் காவல்துறை தேடி வருகிறது.
பாதிக்கப்பட்ட 20 வயது பெண்ணின் தாயார் நேற்று அதிகாலை 1.17 மணியளவில் புகார் செய்ததை அடுத்து இந்தத் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டதாக மலாக்கா மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார். தனது மகளைக் காணவில்லை என்றும், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அப்புகாரில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
"புகார்தாரர், வீட்டின் பின் பக்கக் கதவு வலுக்கட்டாயமாகத் திறக்கப் பட்டிருப்பதைக் கவனித்துள்ளார். பின்னர், சிசிடிவி பதிவுகளைச் சோதனையிட்டபோது, 22 வயதான அவரது கணவரான சந்தேக நபர், அப்பெண்ணை அந்த கரோக்கே மையத்தில் கொடூரமாகத் தாக்கும் காட்சி பதிவாகியிருந்தது," என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட அப்பெண் அதிகாலை 4.41 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டு, சிகப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்றது தெரியவந்தது.
"தாக்குதல் காரணமாக அப்பெண்ணின் தலை மற்றும் வலது கன்னத்தில் மென்திசு காயம் ஏற்பட்டிருப்பது மேலதிக பரிசோதனையில் உறுதிசெய்யப் பட்டது," என்று அவர் குறிப்பிட்டார்.
சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில், சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணைக் குத்தியும், அறைந்தும், தலைமுடியைப் பிடித்து இழுத்தும், தரையில் கிடந்த அவரது தலையை மோட்டார் சைக்கிளால் ஏற்றியும் தாக்கியுள்ளார் என்று ஸுல்கைரி மேலும் கூறினார்.
சிகிச்சைக்குப் பிறகு, தாயாரால் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட அப்பெண், பின்னர் தனது இரண்டு வயது மகனுடன் சந்தேக நபரைப் பின் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறியதாக நம்பப் படுகிறது.
"புகார்தாரர் இதுவரை மகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் அவரது மகனின் பாதுகாப்புக் குறித்தும் அவர் கவலை கொண்டுள்ளார்."
"இச்சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றவியல் சட்டப் பிரிவு 323 மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் 1994-இன் பிரிவு 18A-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.
முன்னதாக, இச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
கர்ப்பிணி மனைவியைத் தாக்கியதாகக் கருதப்படும் ஆடவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்
18 மார்ச் 2026, 3:34 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?






