அலோர்ஸ்டார், ஆக. 8 - இங்கு அருகிலுள்ள தாமான் கோல்ஃப்பில் வீடொன்றில் கொள்ளையிட்ட கும்பலின் காரினால் மோதப்பட்டு போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார்.
தனது காரிலிருந்து இறங்க முற்பட்டபோது நான்கு கொள்ளையர்கள் பயணித்த டோயோட்டா லெக்சஸ் எஸ்.யு.வி. வாகனம் மோதியதில் 35 வயதான கார்ப்ரல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கெடா மாநில போலீஸ் தலைவர் சிபி அட்ஸ்லி அபு ஷா கூறினார்.
வீடு புகுந்து கொள்ளையிடும் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில் காவல் துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கெடா மாநில போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய ஐவர் கொண்ட குழு இரு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
சந்தேக நபர்களில் ஒருவன் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட வேளையில் அங்கிருந்து வாகனத்தில் தப்பிச் சென்ற இதர மூவர் கப்பளா பாத்தாசில் வெற்றிகரமாக மடக்கிப் பிடிக்கப்பட்டனர் என்று அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது தெரிவித்தார்.
அந்த மூன்று சந்தேக நபர்களும் ஹோட்டல் ஒன்றில் வயதான தம்பதிக்குச் சொந்தமான காரை பறித்துக் கொண்டு தப்பினர். முதியவரை காரின் ஓட்டுநர் இருக்கையிலிருந்து இழுத்து வெளியே தள்ளிய அக்கொள்ளையர்கள் காரிலிருந்த மூதாட்டியுடன் அங்கிருந்து தப்பினர் என்றார் அவர்.
அவர்கள் ஓட்டிச் சென்ற கார் கப்பளா பாத்தாசில் விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து மூன்று சந்தேக நபர்களையும் போலீசார் சுற்றுவட்டாரத்தில் கைது செய்தனர் என்று அவர் சொன்னார்.
இருபத்து நான்கு முதல் 26 வயது வரையிலான அந்த நான்கு சந்தேக நபர்களுக்கும் எதிராக குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவு மற்றும் வீடு புகுந்து கொள்ளையிட்டது தொடர்பில் அதே சட்டத்தின் 457வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.
இந்த கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் 26 வயது ஆடவனுக்கு 77 குற்றப்பதிவுகள் உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை வீடு புகுந்து திருடுவது, கார் திருட்டு மற்றும் போதைப் பொருள் தொடர்புடையவையாகும் என அவர் குறிப்பிட்டார்.


