கோத்தா பாரு, மார்ச் 16: எதிர்வரும் ஹரிராயா ஐடில்ஃபித்ரி பெருநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மார்ச் 19-ஆம் தேதி வியாழக்கிழமையை கிளந்தான் மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
மாநில மக்கள் பெருநாள் முன்னேற்பாடுகளைச் சீராகச் செய்வதற்கும், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கிளந்தான் மந்திரி புசார் டத்தோ முகமட் நசுருடின் டாவுட் தெரிவித்தார்.
இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் மார்ச் 20 அல்லது மார்ச் 21 ஆகிய தேதிகளில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னதாகவே வழங்கப்பட்டுள்ள இந்த விடுமுறை மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
"இந்த விடுமுறை தினத்தை மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் செலவிடக் கிடைக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதுகிறேன். மாநில மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஹரிராயா ஐடில்ஃபித்ரி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








