ஹரி ராயா ஐடில்ஃபித்ரி கூடுதல் விடுமுறை: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

15 மார்ச் 2026, 8:08 AM
ஹரி ராயா ஐடில்ஃபித்ரி கூடுதல் விடுமுறை: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

கோத்தா கினபாலு, மார்ச் 15: ரமலான் மாதம் முழுவதும் கடினமாக உழைத்த மக்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில், இவ்வாண்டு ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு ஒரு நாள் கூடுதல் பொது விடுமுறை வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்த கூடுதல் விடுமுறை நாளுக்கானத் தீர்மானம், 1 ஷவ்வால் பிறை அறிவிக்கப்படும் தேதியைப் பொறுத்து அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

இங்கு நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய நுகர்வோர் தின விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர், ஹரி ராயா பெருநாள் மார்ச் 20 (வெள்ளிக்கிழமை) அன்று கொண்டாடப்பட்டால், அதற்குப் பதிலாக மார்ச் 23 (திங்கட்கிழமை) கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்றார்.

ஒருவேளை பெருநாள் மார்ச் 21 (சனிக்கிழமை) அன்று கொண்டாடப்பட்டால், மார்ச் 20 (வெள்ளிக்கிழமை) கூடுதல் விடுமுறையாகத் தீர்மானிக்கப்படும் என அவர் விளக்கமளித்தார்.

மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கானத் திட்டங்களை முன்கூட்டியே வகுப்பதற்கு ஏதுவாக இந்த அறிவிப்பு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ரமலான் மாதத்தில் அயராது உழைத்த மக்கள், தங்களின் அன்புக்குரிய குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதே இந்த விடுமுறை அறிவிப்பின் நோக்கம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, பெருநாளை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க 'பண்டிகைக் கால உச்ச வரம்பு விலை திட்டம்' (SHMMP) அமல்படுத்தப்படுவதையும் பிரதமர் அறிவித்தார். மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி 15 நாட்களுக்குச் செயல்பாட்டில் இருக்கும் இத்திட்டம், பெருநாளுக்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகவும், ஏழு நாட்களுக்குப் பின்னதாகவும் நடைமுறையில் இருக்கும்.

இதன் கீழ் தீபகற்ப மலேசியாவில் 24 பொருட்களும், சபா மற்றும் சரவாக்கில் 23 பொருட்களும், லபுவான் கூட்டரசுப் பிரதேசத்தில் 22 பொருட்களும் விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

உணவுப் பொருட்கள் குறித்துப் பேசுகையில், ஏற்றுமதி நாடான தாய்லாந்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாகச் சிவப்பு மிளகாய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு விலையும் சற்று உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, தற்காலிக மாற்றாகப் பொதுமக்கள் காய்ந்த மிளகாயைப் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியதோடு, விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலை அமைச்சு விரிவாகக் கண்காணிக்கும் என்றும் உறுதி அளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.