ஷா ஆலம், மார்ச் 15: எதிர்வரவிருக்கும் ஹரி ராயா ஐடில்ஃபித்ரிபெருநாளை முன்னிட்டு, கோத்தா அங்கெரிக் தொகுதியில் குறைந்த வருமானம் பெறும் பி40 (B40) பிரிவைச் சேர்ந்த 1 ,000 குடியிருப்பாளர்களுக்கு தலா 200 ரிங்கிட் மதிப்பிலான 'ஜோம் ஷோப்பிங்' வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் இப்பகுதி மக்கள் தங்களின் பண்டிகைக் காலத் தேவைகளை எவ்வித சிரமமுமின்றி பூர்த்தி செய்துகொள்ள சிலாங்கூர் மாநில அரசு வழிவகை செய்துள்ளது.
கடந்த ஆண்டு 800 ஆக இருந்த பயனீட்டாளர்களின் எண்ணிக்கை, இவ்வாண்டு 1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகக் கோத்தா அங்கெரிக் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி குறிப்பிட்டார்.
அப்பகுதியில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அதிகப்படியான மக்கள் இச்சலுகையைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த 200 ரிங்கிட் மதிப்பிலான வவுச்சரைக் கொண்டு, மக்கள் தங்களுக்குத் தேவையான புத்தாடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும், இது பி40 குடும்பங்களுக்குப் பெரும் உதவியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒட்டுமொத்தமாக, இவ்வாண்டு சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 40,400 'ஜோம் ஷோப்பிங்' வவுச்சர்கள் தகுதியுள்ள நபர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதற்காக மாநில அரசு சுமார் 8.08 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு தெரிவித்தார்.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மக்கள் தங்களின் பெருநாள் முன்னேற்பாடுகளைச் சிறப்பாகச் செய்வதற்காகவே இந்த உதவி வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் நிதானமாகப் பொருட்களை வாங்கி மகிழ்வதற்கு ஏதுவாக, இந்த வவுச்சர்களைப் பயன்படுத்துவதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மார்ச் 18-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த இக்காலக்கெடு, தற்போது மார்ச் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், இஸ்லாமியப் பெருமக்கள் தங்களின் இறுதிநேரப் பண்டிகை ஷோப்பிங்கை எவ்விதப் பதற்றமுமின்றி மேற்கொள்ள முடியும் என மாநில அரசு அறிவித்துள்ளது.









