ஷா ஆலம், மார்ச் 13: இந்த ஆண்டுக்கான ஹரிராயா ஐடில்ஃபித்ரி பெருநாள் கொண்டாடப்படும் தேதி குறித்துப் பொதுமக்கள் எவ்விதமான ஊகங்களையும் செய்ய வேண்டாம் என்றும், எதிர்வரும் வியாழக்கிழமை (மார்ச் 19) அன்று வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகப் பொறுமையுடன் காத்திருக்குமாறும் சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த ஆண்டுப் பெருநாள் சனிக்கிழமைக்கு (மார்ச் 21) பதிலாக வெள்ளிக்கிழமையே (மார்ச் 20) வரக்கூடும் எனப் பரவி வரும் ஆதாரமற்ற தகவல்களைத் தொடர்ந்து சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இத்தகைய அடிப்படையற்ற கணிப்புகள் இஸ்லாமியர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகச் சிலாங்கூர் அரண்மனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உறுதிப்படுத்தப்படாத தகவல்களை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், பொதுமக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுல்தான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாகச் சிலாங்கூர் மாநில முஃப்தி இலாகா வெளியிட்டுள்ள விளக்கங்களையும், இன்றைய வெள்ளிக்கிழமை தொழுகையின் போது வாசிக்கப்பட்ட போதனைகளையும் மக்கள் ஆழமாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்," என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவின் நீண்டகால நடைமுறைப்படி, ஹரிராயா பெருநாள் தேதியானது மலாய் ஆட்சியாளர்களின் ஒப்புதலுக்குப் பிறகு, எதிர்வரும் மார்ச் 19-ஆம் தேதி அன்று 'அரச முத்திரை காப்பாளர்' (Penyimpan Mohor Besar Raja-Raja) மூலமாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பதைyum சுல்தான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளையில், பெருநாள் தேதி குறித்த விவாதங்களில் அதிக நேரத்தைச் செலவிட்டு, ரமலான் மாதத்தின் புனிதமான இறுதிப் பத்து நாட்களை மக்கள் வீணடித்துவிடக் கூடாது என்றும், இக்காலக்கட்டத்தில் பிரார்த்தனைகளிலும் வழிபாடுகளிலும் அதிக கவனம் செலுத்தி இறை அருளைப் பெறுமாறும் சிலாங்கூர் சுல்தான் அவர்கள் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.








