மாணவர்களுக்கு உதவ ரவாங்கில் 'PinjamGajet' திட்டம் ஏற்பாடு

13 மார்ச் 2026, 4:45 AM
மாணவர்களுக்கு உதவ ரவாங்கில் 'PinjamGajet' திட்டம் ஏற்பாடு

ஷா ஆலம், மார்ச் 13 - குறைந்த வருமானம் பெறும் (B40) குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்குத் தேவையான மின்னணு சாதன வசதிகளைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், ரவாங் வட்டார மக்கள் தங்களின் பழைய மடிக்கணினிகளைத் தானமாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

'PinjamGajet' எனும் இந்தச் சிறப்பான திட்டம் குறித்து ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் தனது முகநூல் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார். பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் பழைய அல்லது பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகள் முறையாகப் பழுதுபார்க்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட பின்னர் அவை தேவைப்படும் மாணவர்களுக்குக் கடனாக வழங்கப்படும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இவ்வாறு சீரமைக்கப்பட்ட மடிக்கணினிகளை மாணவர்கள் மாதத்திற்கு வெறும் 10 ரிங்கிட் என்ற மிகக்குறைந்த வாடகையில் பெற்றுப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை வழங்க விரும்புவோரின் வசதிக்காக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமே ஒரு சேகரிப்பு மையமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தானமாக வழங்கப்படும் ஒவ்வொரு மடிக்கணினியும் ஒரு சிறப்பு அமைப்பின் மூலம் பதிவு செய்யப்படும். இதன் வழியாகத் தாங்கள் வழங்கிய சாதனம் யாருக்குச் சென்றடைந்துள்ளது என்பதை நன்கொடையாளர்கள் வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள முடியும்.

தேவையற்ற மின்னணு கழிவுகளைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் டிஜிட்டல் கற்றல் முறையில் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் பங்கெடுக்க அல்லது மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ள https://pinjamgajet.ayuhmalaysia.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.