ஹரிராயா ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு கனரக வாகனங்களுக்குச் சாலையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது

12 மார்ச் 2026, 7:24 AM
ஹரிராயா ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு கனரக வாகனங்களுக்குச் சாலையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது

புத்ராஜெயா, மார்ச் 12 – எதிர்வரும் ஹரிராயா ஐடில்ஃபித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு, சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட தேதிகளில் கனரக வாகனங்கள் சாலையில் பயணிக்க போக்குவரத்து அமைச்சு (MOT) தடை விதித்துள்ளது.

இந்தத் தடை, முதற்கட்டமாக மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும், அதனைத் தொடர்ந்து மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் அமல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் 2026-ஆம் ஆண்டிற்கான மாதாந்திரக் கூட்டத்திலும், 'பாடுவான் காசிஹ் மடாணி' மற்றும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், இந்தத் தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சாலைப் போக்குவரத்துத் துறைக்கு (JPJ) உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பண்டிகைக் காலங்களில் கவனக்குறைவு மற்றும் முறையற்ற பயணத் திட்டமிடல் காரணமாகப் பல உயிர்களைப் பறிக்கும் சாலை விபத்துகள் அதிகரிப்பதைத் தடுப்பதே இந்தத் தடையின் முக்கிய நோக்கமாகும்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், இரயில் பயணிகளின் வசதிக்காகக் கெரேதாபி தானா மலாயு (KTMB) நிறுவனம், அதிகத் தேவையுள்ள வழித்தடங்களில் கூடுதல் பயணங்களையும் இருக்கைகளையும் அதிகரிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். மேலும், கிழக்குக் கரைப் பகுதிகளுக்குப் பயணம் செய்பவர்களுக்கு ஒரு நற்செய்தியாக, அடுத்த ஆண்டு முதல் ஈ.சி.ஆர்.எல் (ECRL) இரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பண்டிகைக் காலங்களில் கூடுதல் விரைவுப் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்தச் சேவைகள் அனைத்தும் பாதுகாப்பான முறையிலும் ஒழுங்குமுறையுடனும் இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்துத் துறையினரை வலியுறுத்தினார். சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரைவழிப் போக்குவரத்துத் துறையைத் தீவிரமாகக் கண்காணித்து, சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வார்கள் என்றும் அவர் உறுதி அளித்தார்.

ஊர் திரும்பும் பொதுமக்கள் முடிந்தவரைப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும், சொந்த வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களைச் சரிபார்த்துவிட்டு, நிர்ணயிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாட்டை மதித்து நடக்குமாறும் அந்தோணி லோக், அறிவுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.