தெஹ்ரான், மார்ச் 9 - ஈரான் தனது புதிய உச்சநிலைத் தலைவராக ஆயதொல்லா மொஜ்தபா கமேனியை நியமித்துள்ளது.இவர், அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் உச்சநிலைத் தலைவர் ஆயதொல்லா அலி கமேனியின் மகன் ஆவார்.
ஈரானின் அடுத்த உச்சநிலைத் தலைவர், அமெரிக்காவிற்கு இணக்கமாகச் செயல்படுபவராக இருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
தனது விருப்பத்திற்கு உட்படாத எவரும் அப்பதவியில் நீண்ட காலம் நீடிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்திருந்தார்.இருப்பினும், அமெரிக்காவிற்குப் பெரும் தலைவலியாக விளங்கி, அண்மையில் தாக்குதலில் உயிரிழந்த ஆயதொல்லாவின் மகனையே ஈரான் புதிய தலைவராக அறிவித்துள்ளது.
56 வயதாகும் மொஜ்தபாவின் இந்த நியமனம், மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கெனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் தீவிரமடையச் செய்யும் என அஞ்சப்படுகிறது.
ஆயினும், உச்சநிலைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது ஈரானின் இறையாண்மைக்கு உட்பட்டது என்றும், இதில் வெளிநாடுகளின் தலையீட்டிற்கு இடமில்லை என்றும் தெஹ்ரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.







