2026-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட ரஹ்மா ரொக்க உதவித்தொகை (STR) நாளை முதல் விநியோகம்

9 மார்ச் 2026, 7:25 AM
2026-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட ரஹ்மா ரொக்க உதவித்தொகை (STR) நாளை முதல் விநியோகம்

புத்ராஜெயா, மார்ச் 9: ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய மக்களுக்கு உதவும் வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட ரஹ்மா ரொக்க உதவித்தொகை (STR) வழங்கும் தேதி மார்ச் 10-ஆம் தேதிக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) பணியாளர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் இத்தகவலை வெளியிட்டார்.

இந்த இரண்டாம் கட்டச் செலுத்துதலில் RM1.3 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் ஐந்து மில்லியன் பயனாளிகள் பயனடைவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

முதலில் ஏப்ரல் மாதத்தில் வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த உதவித்தொகை, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மார்ச் 10-ஆம் தேதியே வழங்கப்படும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

 மேலும் தரம் 15 மற்றும் அதற்குக் கீழுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஒப்பந்த பணியாளர்களுக்கும் RM500 சிறப்பு நிதியுதவி (BKK) மார்ச் 13-ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பெறாத முன்னாள் படைவீரர்களுக்கும் அதே தேதியில் RM250 வழங்கப்படும் என்றும், இந்த உதவித்தொகைக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 இவற்றுடன் சேர்த்து, சுமார் 70,000 குர்ஆன் மற்றும் ஃபர்து ஐன் (KAFA) ஆசிரியர்கள், இமாம்கள், பிலால்கள் மற்றும் மசூதி பணியாளர்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் தலா RM500 சிறப்பு பங்களிப்புத் தொகை மார்ச் 13-ஆம் தேதி வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். இது குறித்த கூடுதல் விவரங்களை https://bantuantunai.hasil.gov.my என்ற அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.