கோம்பாக், மார்ச் 9 — யாயாசான் எம்பிஐ ஏற்பாடு செய்த பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் (பிளாட்ஸ்) மாசோக் பஜார் திட்டம், மார்ச் 7 நிலவரப்படி தொராயமாக RM4.5 மில்லியன் விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
அக்ரோபேங்க் மற்றும் ஊராட்சி மன்றங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த திட்டத்தில் 15 ரமலான் பஜார்கள் பங்கேற்றுள்ளன. இந்த பஜார்கள் மூலம்தான் RM4.5 மில்லியன் பெறப்பட்டதாக எம்பிஐ அறக்கட்டளைத் தலைவர் அஹ்மட் அஸ்ரி சைனல் நோர் தெரிவித்துள்ளார்.
“எங்களிடம் மொத்தம் 15 பஜார்கள் உள்ளன. வருகையாளர்கள் பணம் செலுத்த பயன்படுத்தும் அக்ரோபேங்க் QR குறியீடுகள் மூலம் விற்பனை தரவை நாங்கள் கண்காணிக்கிறோம். மார்ச் 7 நிலவரப்படி, இந்த பஜார்களிலிருந்து மொத்த விற்பனை RM4 மில்லியனைத் தாண்டி, தோராயமாக RM4.5 மில்லியனாகியுள்ளது,” அவர் கூறினார்.
கடந்த ஆண்டை விட இந்த புள்ளிவிவரங்கள் அதிகரித்துள்ளதைக் அஹ்மட் அஸ்ரி குறிப்பிட்டார். அதிக வருவாய் ஈட்டிய மூன்று பஜார்கள் ஸ்டேடியம் ஷா ஆலம் (RM700,000), தாமான் கிரீன்வுட் (RM400,000) மற்றும் USJ 4 ஆகும்.
“இது கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது. இதற்கு அதிக எண்ணிக்கையிலான பஜார்கள் மற்றும் பொதுமக்களின் வாங்கும் திறன் காரணமாக இருக்கலாம்,” அவர் குறிப்பிட்டார்.
அவரின் கணிப்பின்படி, இந்த மாத இறுதிக்குள் மொத்த விற்பனை RM8 மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டின் விற்பனை எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
முன்னதாகப், பிளாட்ஸ் மாசோக் பஜார் திட்டம் ரமலான் மாதம் முழுவதும் RM60,000 ஒதுக்கீட்டுடன் தொடரும் என்றும் தொழில்முனைவோர் நிர்வாகக் கவுன்சிலர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பஜார்கள் ஒவ்வொன்றும் RM10 மதிப்புள்ள 300 டிஜிட்டல் வவுச்சர்கள் பெறும், அவை வருகையாளர்களின் செலவைக் குறைக்க உதவும் வகையில் விநியோகிக்கப்படும்.








