கூலாய், மார்ச் 7: சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான 16 வயது வரம்பை இவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் அமல் படுத்துவதற்கு முன்னர், வயதை உறுதிப்படுத்தும் பல்வேறு வழிமுறைகளை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM) ஆராய்ந்து வருகிறது.
மெட்டா, கூகுள் மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடக சேவை வழங்குநர்களுடன் SKMM கலந்துரையாடல் அமர்வுகளை நடத்தி, பொருத்தமான வழிமுறைகளைத் தீர்மானித்து வருவதாக தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
இந்த செயல்முறை சம்பந்தப்பட்ட சமூக ஊடக தளங்களுடன் இணைந்து ஒரு ஒழுங்குமுறை சோதனைக்களத்தின் (regulatory sandbox) மூலம் மேற்கொள்ளப் படுவதாக அவர் கூறினார்.
"மலேசியாவில் வயதை உறுதிப்படுத்த அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் மைடிஜிட்டல் ஐடி போன்ற முறைகள் உள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.
"இருப்பினும், அதே நேரத்தில், வயதை உறுதிப் படுத்தும் பிற வழி முறைகளைப் பரிசீலிக்கவும் SKMM தயாராக உள்ளது," என்று இன்று கூலாய் நாடாளுமன்ற ரமலான் மாதத்திற்கான பள்ளிவாசல்கள் மற்றும் சூராக்களுக்கான நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
சமூக ஊடகக் கணக்குகளைத் திறப்பதற்கான குறைந்தபட்ச வயதான 16 என்பதை அமல்படுத்த, 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் ஒவ்வொரு சமூக ஊடக தளமும் மின்னியல் வாடிக்கையாளர் சரிபார்ப்பை (eKYC) செயல் படுத்த வேண்டுமென அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
இதற்கிடையில், இந்தோனேசியா மார்ச் 28 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிக ஆபத்துள்ள டிஜிட்டல் தளங்களுக்கான அணுகலைத் தடை செய்யும் முதல் மேற்கத்தியரல்லாத நாடாக மாற உள்ளது.
முன்னதாக, கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ, இந்த ஆண்டு ரமலானை முன்னிட்டு தனது தொகுதியில் உள்ள 30 மசூதிகள் மற்றும் 57 சூராக்களுக்கு மொத்தம் RM93,000 ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகக் கூறினார்.







