கிள்ளானில் ரயில்வே கேபிள் திருட முயன்ற வெளிநாட்டு நபர் கைது

6 மார்ச் 2026, 8:16 AM
கிள்ளானில் ரயில்வே கேபிள் திருட முயன்ற வெளிநாட்டு நபர் கைது

கிள்ளான், மார்ச் 6- தெலுக் காடோங் – தெலுக் புலாய் ரயில் பாதைக்கு இடைப்பட்ட பகுதியில், ரயில்வே கேபிள்களைத் திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு ஆடவர் ஒருவர் நேற்று மாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் கிமீ 37.478 வது மைல் கல் பகுதியில் நிகழ்ந்ததாக மலாயா ரயில்வே நிறுவனம் (KTMB) உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு அருகில் குற்றத்தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த KTMB துணைப் போலீஸ் படையினர், சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்த அந்த ஆடவரைக் கவனித்துள்ளனர்.

 போலீசாரைக் கண்டதும் அந்த நபர் தப்பியோட முயன்ற போதிலும், அதிகாரிகள் அவரைத் துரத்திச் சென்று வெற்றிகரமாக மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு சிறிய கைப்பை, ஒரு கத்தி மற்றும் ஒரு கத்தரிக்கோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

 இந்த ஆயுதங்களைக் கொண்டு அவர் ரயில்வே கேபிள்களைத் துண்டித்துத் திருடத் திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்திற்குத் தகவல் வழங்கப்பட்டது.

 சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரோந்துப் போலீஸ் (MPV) குழுவினரிடம், பிடிபட்ட நபர் மற்றும் அவரிடமிருந்த ஆதாரங்கள் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டன.

ரயில்வே சொத்துக்களைச் சேதப்படுத்துவதும், அத்துமீறி நுழைவதும் 1991-ஆம் ஆண்டு ரயில்வே சட்டம் (சட்டம் 463) மற்றும் 2010-ஆம் ஆண்டு நிலப் பொதுப் போக்குவரத்துச் சட்டம் (சட்டம் 715) ஆகியவற்றின் கீழ் கடுமையான குற்றமாகும் என்று KTMB எச்சரித்துள்ளது.

 இத்தகையச் செயல்கள் ரயில் சேவையைப் பாதிப்பதோடு, பயணிகளின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும், தடையற்ற ரயில் சேவையை உறுதிப்படுத்தவும் பாதுகாப்பு ரோந்துப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று KTMB தெரிவித்துள்ளது.

 பொதுமக்கள் யாராவது ரயில் தண்டவாளப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டால், 03-2263 1194 என்ற எண்ணிற்கு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.