கோலாலம்பூர், மார்ச் 5 – தற்போது மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியில் மலேசியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதுகாப்பாக இருப்பதாகவும், உலகளாவிய முன்னேற்றங்களை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசியா விழிப்புடன் இருப்பதை மடாணி அரசாங்கம் உறுதி செய்வதாகவும், மக்களையும் நாட்டின் பொருளாதாரத்தின் தொடர்ச்சியையும் பாதுகாப்பதற்காக அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் சமூக ஊடகப் பதிவில் பிரதமர் குறிப்பிட்டார்.
நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், புத்ராஜெயாவில் மாநில முதலமைச்சர்களுடன் நடைபெற்ற தேசிய நிதி கவுன்சில் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
“மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலால் நிச்சயமற்ற சூழ்நிலை இருந்தபோதிலும் மலேசியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது,” என அவர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“2025ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி கணிப்புகளை விட அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் வேலையின்மை விகிதம் 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவில் உள்ளது,” என்று அன்வார் கூறினார்.








