கோலாலம்பூர், மார்ச் 6 – 2026 உலகக் கோப்பை ஹாக்கி தகுதிச் சுற்றின் அரையிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை தேசிய மகளிர் ஹாக்கி அணி இழந்துள்ளது. இன்று காலை சிலியின், சான்டியாகோவில் நடைபெற்ற 'பி' பிரிவுக்கான மூன்றாவது ஆட்டத்தில், ஜப்பானிடம் 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததால் இந்த நிலை ஏற்பட்டது.
இந்தத் தோல்வியின் விளைவாக, 'மலேசியன் டைகிரஸ்' என்று அழைக்கப்படும் நமது மகளிர் அணி, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்ட் 14 முதல் 30 வரை நடைபெறவுள்ள 2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை நழுவ விட்டது.
எஸ்டாடியோ நேஷனல் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஜப்பான் தனது கோல் கணக்கைப் போட்டியின் மூன்றாவது கால் பகுதியில் தொடங்கியது. ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் ஷிஹோ கோபயகாவா ஒரு ஃபீல்ட் கோலை அடித்து ஜப்பானை முன்னிலைப்படுத்தினார். பின்னர், 45-வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து, ஜப்பான் தனது நிலையை வலுப்படுத்தியது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் அணி, மலேசியன் டைகிரஸ் அணிக்கு மேலும் அதிர்ச்சியளித்தது. ஆட்டம் தொடங்கிய மூன்று நிமிடங்கள் கழித்து ஹிரோகா முரயாமா மூன்றாவது கோலையும், 55-வது நிமிடத்தில் அகாரி நாககோமி நான்காவது கோலையும் அடித்து ஜப்பானின் வெற்றியை உறுதி செய்தனர்.
மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு (MHC) பகிர்ந்த காணொளி ஒன்றில், மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் முகமட் நசிஹின் நுப்லி இப்ராஹிம், ஆட்டத்தின் போது ஏற்பட்ட அழுத்தத்தைக் கையாளத் தவறியதே தோல்விக்கு முக்கியக் காரணம் என்றார்.
"முதல் கால் பகுதியில் நமது வீராங்கனைகள் சிறப்பாகவும், கட்டுப்பாட்டுடனும் விளையாடினர். ஜப்பான் அணியால் நமது தற்காப்புப் பகுதியை உடைப்பது கடினமாக இருந்தது. ஆனால், ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் வீராங்கனைகள் கடுமையான அழுத்தத்தைச் சந்தித்தனர்," என்று அவர் கூறினார்.
"இளம் வீராங்கனைகளுக்கு இன்னும் அதிகமான அனைத்துலகப் போட்டிகளின் அனுபவம் தேவைப்படுகிறது. நாங்கள் செய்த சில சிறிய தவறுகள் எதிரணி எளிதாக கோல் அடிக்க வழிவகுத்தன. அடுத்ததாக, ஐந்தாவது முதல் எட்டாவது இடங்களுக்கான போட்டியில் நாங்கள் வலுவாக மீண்டு வந்து, ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தைப் பிடிப்பதை உறுதி செய்வோம்," என்றார் அவர்.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, மலேசியன் டைகிரஸ் அணி, ஐந்தாவது முதல் எட்டாவது இடங்களுக்கான போட்டியில், 'ஏ' பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்த அணியை எதிர்கொள்ளும்.
ஒவ்வொரு தகுதிச் சுற்றுப் போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளும், இரண்டு தகுதிச் சுற்றுகளிலும் நான்காம் இடம் பிடிக்கும் அணிகளில் சிறந்த உலகத் தரவரிசையைக் கொண்ட ஓர் அணியும் மட்டுமே உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு தகுதிச் சுற்றுப் போட்டி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.






