ஷா ஆலம், மார்ச் 18 – சிலாங்கூர், கிள்ளான் மேரு பகுதியில் அமைந்துள்ள தாமான் மேரு மக்மூர் குடியிருப்பாளர்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு வரும் வீடுகளுக்கான முழுமை மற்றும் இணக்கச் சான்றிதழ் (CCC) தொடர்பான சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், எதிர்வரும் ஹரிராயா பெருநாளுக்குப் பிறகு அவர்களுடன் ஒரு சிறப்புச் சந்திப்பு நடத்தப்படவுள்ளது என மேரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரியம் அப்துல் ரஷிட் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் திட்டத்தை மேற்கொண்ட வீட்டு மேம்பாட்டாளர் தற்போது தலைமறைவாகிவிட்டதாலும், குறிப்பாக இண்டா வாட்டர் கொன்சோர்டியம் (IWK) மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் அரைகுறையாக கைவிடப்பட்டதாலும், இந்தப் பிரச்சனை இரு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வருவதாக மாரியம் விளக்கமளித்தார்.
நீண்ட காலமாகத் தீர்வுக்காகக் காத்திருக்கும் மக்களின் அவல நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், குடியிருப்பாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைக் கருத்தில்கொண்டு, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க மாநில அரசு தீவிர கவனம் செலுத்தும் என்று மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
இப்பிரச்சனை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சட்ட ரீதியான ஆலோசனைகளைப் பெறுவதற்கும் மாநில வீட்டு வசதித் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அலுவலகத்தைத் தாம் தொடர்புகொள்ளப் போவதாக அவர் கூறினார்.
அனைத்து நிலைகளிலும் உள்ள குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகளுடன் பேசி, ஒட்டுமொத்தப் பிரச்சனையும் விரிவாக ஆராயத் திட்டமிட்டுள்ள மாரியம், இது தொடர்பான ஆவணங்களை முறையாகத் திரட்டி மாநில அரசின் பார்வைக்குக் கொண்டு செல்லவுள்ளார்.
குறிப்பாக, வீட்டு வசதித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா அவர்களுக்கு அதிகாரப்பூர்வக் கடிதம் வழங்கி, இந்த விவகாரத்தில் முறையான தீர்வினைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஹரிராயாவிற்குப் பிறகு நடைபெறும் சந்திப்பில் இது குறித்த தெளிவான முடிவுகள் எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.








