ஷா ஆலம், பிப் 27- கடந்த ஜனவரி மாதம் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற கிம் பான் கோனின் வழிகாட்டுதலில், சிலாங்கூர் எஃப்சி அணி இந்த பருவத்தில் விளையாடிய 10 ஆட்டங்களிலும் தோல்வியைக் காணாமல் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
தென் கொரியப் பயிற்சியாளரான கிம் பான் கோன், உள்ளூர் காற்பந்து கலாச்சாரம் மற்றும் வீரர்களின் மனநிலையைத் துல்லியமாகப் புரிந்திருப்பது அணிக்குக் கிடைத்த மிகப்பெரிய பலம் எனத் துணைப் பயிற்சியாளர் ஷரோம் கலாம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
எதிரணியைப் பற்றி கவலைப்படாமல் தங்களின் சொந்த பலத்தை மேம்படுத்துவதிலும், தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவதிலும் பயிற்சியாளர் காட்டும் ஆர்வம் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் எட்டு வெற்றிகளையும் இரண்டு சமநிலைகளையும் பதிவு செய்துள்ள 'சிகப்பு அரக்கர்கள்' (Gergasi Merah) படை, தற்போது சூப்பர் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
மலேசியக் கிண்ணம் மற்றும் ஆசியான் கிளப் சாம்பியன்ஷிப் தொடர்களின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள சிலாங்கூர் அணி, அடுத்த பருவத்தில் ஆசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளது.
சொந்த மண்ணில் எப்பேற்பட்ட எதிரணியையும் வீழ்த்தும் வலிமையான கலாச்சாரத்தை வீரர்களிடையே விதைப்பதே தமது இறுதி இலக்கு என கிம் பான் கோன் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.







