ஷா ஆலம், பிப். 27 – புக்கிட் செந்தோசா, ஜாலான் தெலுக்கி பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட தொலைத்தொடர்பு கோபுர அமைப்பை இடிக்கும் நடவடிக்கையை உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (MPHS) மேற்கொண்டது.
எம்பிஎச்எஸ் அமலாக்கத் துறையின் உதவியுடன், எம்பிஎச்எஸ் கட்டிடத் துறை இந்த நடவடிக்கையை வழிநடத்தியது. மேலும், தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB), அதன் துணை காவல்துறை பிரிவு, உலு சிலாங்கூர் நில மற்றும் மாவட்ட அலுவலகத்தின் பிரதிநிதிகள், நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பல வெளிப்புற அமைப்புகளின் ஒத்துழைப்பும் பெறப்பட்டது.
கட்டப்படும் ஒவ்வொரு தொலைத்தொடர்பு கோபுர அமைப்பும் நடைமுறையிலுள்ள விதிமுறைகளுக்கு இணங்குவதையும், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து முன் அனுமதி பெறப்படுவதையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எம்பிஎச்எஸ் தெரிவித்துள்ளது.
“இந்த நடவடிக்கையின் நோக்கம் பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், உலு சிலாங்கூர் மாவட்ட நிர்வாகப் பகுதிக்குள் திட்டமிட்ட வளர்ச்சியை கட்டுப்படுத்துவதும் ஆகும்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சட்டத்துக்கு இணங்குவதை உறுதி செய்ய, அனுமதியின்றி தொலைத்தொடர்பு கோபுர அமைப்பை கட்டும் அல்லது நிறுவும் எந்த தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“இந்த தொடர் முயற்சி, எந்தவொரு தொலைத்தொடர்பு கோபுரத்தையும் கட்ட அல்லது நிறுவுவதற்கு முன் அனுமதியைப் பெற வேண்டும் என்ற விழிப்புணர்வை அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது,” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








