ஷா ஆலம், பிப் 20: ஷா ஆலம், பிரிவு 7, ஜாலான் ப்ளம்பம் பகுதியில் சிவப்பு நிற பெரோடுவா ஆக்சியா காரைப் பயன்படுத்தி, கத்தியைக் காட்டி கொள்ளையிட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், இந்தோனேசியப் பெண் ஒருவர் குப்பைகளைக் கொட்டுவதற்காக நடந்து சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஷா ஆலம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ரம்சே எம்போல் தெரிவித்தார். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், சுமார் 350 ரிங்கிட் முதல் 500 ரிங்கிட் வரை நஷ்டத்தை எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
"ஷா ஆலம் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சம்பவம் நடந்த அதே நாளில் இரவு 9 மணியளவில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்தனர்," என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டப் பிரிவு 395/397-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணைக்கு உதவும் வகையில் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் சாப்ரி அப்துல் ரானியை 017-2892 628 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


