ஜெர்டி, பிப் 18 (பெர்னாமா) -- 14 ஆண்டுகளுக்கு முன்பு கணவருக்கு உதவியாகத் தொடங்கிய ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர், இன்று பெசுட் வட்டாரத்தில் திறமையான மெக்கானிக்காகப் பரவலாக அறியப்படுகிறார்.
இங்குள்ள கம்போங் கிராயைச் சேர்ந்த 45 வயதான சைனாப் சலீம், ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த வாகனப் பழுதுபார்ப்புத் துறையைத் தனது தொழிலாகத் தேர்ந்தெடுத்ததில் சிறிதும் தயக்கம் காட்டவில்லை.
குறிப்பாக, கியர் பாக்ஸ் பழுதுபார்ப்பதில் இவருக்கு இருக்கும் உயர் திறமையால், திரங்கானு மற்றும் கிளந்தான் மாநில வாகன உரிமையாளர்கள் மத்தியிலும் இவர் கவனம் பெற்றுள்ளார்.
"ஆரம்பத்தில் எனது கணவர், 59 வயதான சஹாரி முகமது சின், வாகனங்களைப் பழுதுபார்ப்பதை நான் பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்தேன். பின்னர், வீட்டிலேயே அவருக்கு உதவியாக அந்த வேலைகளைச் செய்யத் தொடங்கினேன். நானாகவே ஒரு வாகனத்தின் பழுதான இயந்திரப் பாகத்தைச் சரிசெய்தபோது, வாகனங்கள் பழுதுபார்ப்பதில் என் ஆர்வம் மேலும் அதிகரித்தது," என்று கம்போங் அலோர் சாஜியில் உள்ள தனது பட்டறையில் பெர்னாமாவிடம் பேசியபோது அவர் கூறினார்.
பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களைப் பழுதுபார்ப்பதில் தொடங்கி, பின்னர் மெனுவல் கியர் பாக்ஸ் மற்றும் அதனைத் தொடர்ந்து தானியங்கி கியர் பாக்ஸ் பழுதுபார்ப்பதிலும் தேர்ச்சி பெற்றதாக சைனாப் கூறினார்.
தொடக்கக் காலத்திலிருந்தே, தனது பட்டறை வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில், அக்காலத்தில் பெசுட் வட்டாரத்தில் தானியங்கி கியர் பாக்ஸ் பாகங்களைச் சரிசெய்வதில் தேர்ச்சி பெற்றவர் இவர் ஒருவரே.
"அப்போது, தானியங்கி கியர் பாக்ஸ் பழுதானால், வாகன உரிமையாளர்கள் புதிய அல்லது பயன்படுத்தப்பட்ட முழு கியர் பாக்ஸையும் மாற்றிவிடுவார்கள். ஆனால், நான் முழுவதையும் மாற்றாமல், பழுதான பாகத்தை மட்டும் சரிசெய்ய முயற்சிப்பேன். இதனால், வாடிக்கையாளர்களின் பணம் சேமிக்கப்படுவதுடன், கியர் பாக்ஸின் நீடித்த உழைப்பும் உறுதி செய்யப்படுகிறது," என்று கூறிய அவர், தற்போது தானியங்கி கியர் பாக்ஸ்களைச் சரிசெய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக, கணவருக்குப் பக்கவாதம் மற்றும் நரம்புப் பிரச்சினையால் பார்வையை இழந்ததால், சைனாப் தனியாகவே பட்டறை வேலைகளைச் செய்து வருகிறார்.
இருப்பினும், தனது இரண்டாவது மகனான 19 வயது முஹம்மது அஸானி, கனமான 4x4 கியர் பாக்ஸ்களை, வாகனங்களிலிருந்து கழற்றவும் பொருத்தவும் தனக்கு உதவுவது நிம்மதி அளிப்பதாகக் கூறினார்.
ஆரம்பத்தில் சிலர் தனது திறமையைச் சந்தேகப்பட்டாலும், இப்போது திரங்கானுவிற்கு வெளியிலிருந்தும் வாடிக்கையாளர்கள் தன்னைத் தேடி வருவதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.
இவரது திறமையின் காரணமாக, இப்பகுதியில் உள்ள ஒரு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) மையத்தில் வாகனவியல் துறை மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க இவர் அழைக்கப்பட்டார்.
"மற்ற தொழில்களைப் போலவே, இதிலும் சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன. வாடிக்கையாளர்கள் கூலி கொடுக்காமல் இருப்பது, கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவிர்ப்பது போன்ற பல இன்னல்களை நான் எதிர் கொண்டுள்ளேன்," என்று முன்பு பெசுட்டில் உள்ள ஒரு அரசாங்க நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிந்த அவர் குறிப்பிட்டார்.
இரண்டாவது மகனைத் தவிர, தனது மூத்த மகன், 21 வயதான முஹம்மது ஹக்கீமிக்கும் வாகனம் பழுதுபார்க்கும் திறன் உள்ளது, ஆனால் அவர் தற்போது அந்தத் துறையில் பணியாற்றவில்லை என்று சைனாப் கூறினார்.
இதனிடையே, இன்னும் பள்ளிக்குச் செல்லும் தனது மற்ற நான்கு பிள்ளைகளையும் பராமரிக்க, வருமானம் ஈட்டுவதற்காகத் தனது உடல் ஆரோக்கியத்தைப் பேண, உடற்பயிற்சியை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஆறு பிள்ளைகளின் தாய், தயக்கமின்றி மெக்கானிக் பணியில் !
18 பிப்ரவரி 2026, 12:50 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
தொலைபேசி மோசடியில் கார் விற்பனை நிறுவனம் RM452,000 இழப்பு
Bernama
26 ஆகஸ்ட் 2026

national
போலி முதலீட்டு மோசடியில் ஆடை விற்பனையாளர் RM290,910 இழந்தார்
Shalini Rajamogun
2 ஆகஸ்ட் 2026

national
தாசிக் கென்யிர் அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
Shalini Rajamogun
6 ஜூலை 2026

national
தொலைபேசி மோசடியால் வியாபாரி ஒருவர் 8.8 லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளார்
Shalini Rajamogun
7 மே 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



