ஷா ஆலம், பிப் 16: ஷா ஆலம், பிரிவு U12 இல் உள்ள ஒரு உடம்புபிடி மையத்தில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையின் போது, முறையான அனுமதி ஆவணங்கள் இல்லாத ஐந்து வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அரச மலேசிய காவல்துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த சோதனையில், அந்த மையம் முறையான வணிக உரிமம் இன்றி இயங்கி வந்தது கண்டறியப்பட்டதாக ஷா ஆலம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இரவு 9 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், உரிம நிபந்தனைகள் மற்றும் நடைமுறையிலுள்ள துணைச் சட்டங்களுக்கு உட்பட்டு வணிகங்கள் செயல்படுவதை உறுதி செய்வதற்காக விரிவான சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனையின் போது, சம்பந்தப்பட்ட மையம் உரிமம் இன்றி செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஷா ஆலம் மாநகராட்சி அழகு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு மைய துணைச் சட்டம் 2013'-இன் கீழ் அந்த வளாகம் உடனடியாக மூடப்பட்டது.
அதே சோதனையில், அங்கு பணியிலிருந்த முறையான ஆவணங்களற்ற ஐந்து வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். உரிமம் இல்லாத வணிக நடவடிக்கைகளை ஒடுக்கவும், உள்ளூர் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்தவும் இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று ஷா ஆலம் மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.


